சிவபெருமான் பஞ்சபூதங்களில் வடிவாக இருக்கிறார். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய வடிவத்தில் மக்களுக்கு நல்லருள் புரிந்து வருகிறார். சென்னையில் ஒரு கங்கை இருக்கிறது என்றால், வியப்பாக இருக்கிறது அல்லவா? சென்னை புரசைவாக்கத்தில், பஞ்சபூதத் தலங்களில் நீர்த் தலமாக வீற்றிருந்து, மக்களிடம் கருணை காட்டுகிறார். இத்திருக்கோயில், காசிக்கு இணையானது என்று போற்றப்படுகின்றது. இங்கு உள்ள கங்கை தீர்த்தம், சகல விதமான பாவங்களையும் போக்கக்கூடிய புண்ணிய தீர்த்தமாகும். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் `கங்காதீஸ்வரரை’ வணங்கினோம் என்றால், நம்முடைய இடர்கள் அத்தனையும் நீங்கிடும். இத்தகைய, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பக்தர்கள் ஈசனை வணங்கி அருளை பெற்று சுகமான வாழ்வு வாழ்கின்றனர்.
அயோத்திய மன்னன்
கங்காதீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ ராமபிரான் தோன்றியதற்கும் சம்பந்தம் உண்டு.
இந்திரனின் பதவிக்குப் போட்டி சகரனா?
அயோத்திய நாட்டை `சகரன்’ என்ற அரசன் ஆண்டு வந்தார். இவருக்கு கேசினி, சுமதி என்கின்ற இருமனைவியர்கள். கேசினி, தன் தெய்வ பலத்தால் ஒரே ஒரு மகனைப் பெற்றாள். அவன் பெயர் `அசுமஞ்சன்’. சுமதி 60,000 மகன்களைப் பெற்றாள். நாட்டில் செழுமை வளம் பெருகின. மக்கள் சுபிட்சமாக இருந்தனர். மன்னர் சகரன், ஒரு முறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
இந்திரனுக்கு கவலை
தேவேந்திரனுக்கு, இஷ்வாகு வம்சத்தின் அரசன் சகரன்; அஸ்வமேத யாகம் நடத்துவதை விரும்பவில்லை. எனவே, யாகத்தை தடுத்து நிறுத்த யோசித்தான். ஏனெனில், சகரனின் அஸ்வமேத யாகம் பூர்த்தியடைந்தால்; இந்திரனின் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், ஒரு திட்டம் தீட்டினான். அஸ்வமேத குதிரை ஊரைச் சுற்றி வருகின்ற சமயம், அதைக் களவாடிச் சென்று, கபில முனிவர் ஆசிரம பின்புறத்தில், மறைத்து வைத்தான் இந்திரன். அஸ்வமேதக் குதிரை காணாமல், சகரன் கோபமடைந்தான். தன் அறுபதாயிரம் மகன்களை அழைத்து, யாக குதிரையைத் தேடிக் கண்டுபிடித்து வருமாறு கட்டளை இட்டான். அவர்கள் எங்கெங்கோ திரிந்து இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கு நின்ற குதிரையை பிடித்து செல்ல முயன்ற போது, கபில முனிவர் தவம் கலைந்து எழுந்தார்.
எதுவும் அறியாதவர்கள், முனிவர்தான் குதிரையைக் கவர்ந்து வந்தார் என கருதி வசைபாடினர்கள். இதனால் சினம் அடைந்த கபில முனிவர், அனைவரையும் சபித்தார். அக்கணமே அவர்கள் சாம்பல் ஆயினர். இதற்குப் பிறகு, சகரன் அவனுடைய மகன் அனைவரும் மாண்ட பின்பு அசுமஞ்சனின் மகன் அம்சமான், அவனின் மகன் திலீபன் ஆகியோர் அயோத்தி நாட்டை ஆண்டனர். நீண்ட காலத்திற்கு ரகு குலவம்சத்தில் திலீபன் மன்னர் ஆட்சி செய்தார். பின்பு தவத்தின் பயனாக மகன் பிறந்தான். அவன் பெயர் பகீரதன்.
நரகத்தில் மூதாதையர்கள்
தன் பித்ருக்கள் சொர்க்கத்திற்குச் செல்லாமல்; பாதாள லோகத்தில் சாபத்தால் சாம்பல் குவியலாக இருப்பதை பகீரதன் அறிந்தான். அவர்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். கங்கையை பூமிக்கு கொண்டு வரவேண்டும். அப்படி வந்தால் முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்று சொன்னதும். கடும் விரதம் இருந்து, ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வர முயற்சி செய்தான். அப்பொழுது கங்கை ஆனவள், நான் ஓடி வருகின்ற நேரத்தில் மக்களுக்கு தீமை ஏற்படும். எனவே, என்னுடைய பிரளயத்தை தடுக்க வேண்டும் எனக் கூறினாள். இதனால், பகீரதன் சிவபெருமானிடம் கேட்க, சிவபெருமான் கங்கையை தன்னுடைய சடை முடியில் தாங்கிக் கொள்வதாக் கூறி, கங்கையை பூமிக்கு கொண்டு வரச் சொன்னார்.
பகீரதன் கங்கையை அழைக்க, காட்டாறாக ஓடி வந்தவளை சிவபெருமான் சடாமுடியில் தரித்து ஏற்றுக் கொண்டார். இவ்வாறாக கங்கை பூமியில் ஓடி, ஏழு பகுதிகளாக பிரிந்தாள். சாம்பலான பகீரதனின் மூதாதையர்கள் மீது கங்கை நீர் பாதாள லோகம் வரை பாய்ந்து, பாவசாபம் நீங்கி, நற்கதி பெற்று, முக்தி அடைந்தனர். இதன் பிறகு பகீரதன் அயோத்திக்கு திரும்பி நல்லாட்சி புரிந்தான்.
நாரதர் அயோத்திக்கு வருதல்
ஒரு சமயம் தேவரிஷி நாரதர், பகீரதனை பாராட்டி வாழ்த்த அயோத்திக்கு எழுந்தருளினார். பகீரதன் அவரை வரவேற்காமல் பாராமுகம் காட்டினான். கங்கையை கொண்டுவர வழி காட்டியவரே நாரதரிஷிதான். அச்செயலை மறந்தான். தன் தவ ஆற்றலால் ஆகாய கங்கை கொண்டு வந்து, மூதாதையர்கள் சாபம் நீங்கியது என்ற இறுமாப்புடன் சிரித்தான். ஆணவம் கண்ணை மறைத்தது. நன்றி மறந்தான். தான் என்ற அகங்கார கர்வம் அவருடைய செயலில் வெளிப்பட்டது. இதை அறிந்த நாரதர், தம்மை வரவேற்கவில்லை. தேவரிஷி என்று மதிப்பு மரியாதை அளிக்காமல் அவமதித்தான். அவனுடைய கர்வத்தை ஒடுக்க வேண்டும் என எண்ணினார்.“பகீரதா! ஆணவத்தால் பெரியோரை மதிக்க மறந்தாய். உன்னிடம் உள்ள கர்வம் அழிய மேக (தோல்) நோயால் துன்புறுவாய்” என சாபம் அளித்தார்.
நாரதர் கருணை
இதனை கேட்டு, தன் தவற்றை உணர்ந்தான் பகீரதன். “தேவரிஷி நாரத முனிவரே… அறியாமல் செய்து விட்ட பிழையை மன்னித்தருள வேண்டும்” என அவர் திருவடிகளில் பணிந்து வணங்கி சாப விமோசனத்திற்கு வழிகூற வேண்டும்” என்றார். நாரதர் அவன் மீது கருணை கொண்டு;“பகீரதா! சிவபெருமானை வணங்கி 108 தலங்களில் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தால், உன்னுடைய நோயானது நீங்கும் எனக் கூறி விட்டு கிளம்பினார்.
108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல்
பகீரதன் தன் கையால், சிவலிங்கத்தை வடித்து, 107 இடங்களில் பிரதிஷ்டை செய்தார். ஆனால், 108வது சிவலிங்கத்தை எங்கே பிரதிஷ்டை செய்வது என்று அறியாமல் திகைத்தான். சிவபெருமானை சிந்தையால், இரவு பகலாக வணங்கி, 108வது லிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் இடத்தை வழிகாட்டவும் என வேண்டினார்.
சிவபெருமான் கனவில் தோன்றுதல்
`புரிசை’ என்னும் காட்டில், 108வது லிங்கத்தை பிரதிஷ்டை செய்! என கனவில் தோன்றி சிவபெருமான் வழிகாட்டினார். அதன் வழியே பகீரதன் புரிசை வனத்தில் 108வது லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அதன் பின்பு, பகீரதன் சாபம் விலகி, நோய் நீங்கப் பெற்று அயோத்திக்கு சென்றடைந்தார். ஆதலால், இக்கோயில் `கங்காதீஸ்வரர் ஆலயம்’ என்று போற்றப்படுகிறது. கங்கையானவள் பிரளயமாக ஓடி வருகின்ற பொழுது, ஒரு துளி நீர் இங்கே விழுந்ததால், அந்த நீர், குளமாக மாறி, இக்குளத்திற்கு பெருமை சேர்த்தது. இங்கு கங்காதேவி நிரந்தரமாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்த தலம் காசிக்கு இணையாகப் போற்றப்பட்டு புண்ணிய தலமாக உள்ளது. தேவாரத்தில் கங்கையை பற்றி செய்திகள் உள்ளன. அப்பர் பாடிய பாடல்;
“கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர் பொறி அரவும் வைத்தார்,
திங்களை திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்,
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும் வைத்தார்,
அங்கையுள்அனலும் வைத்தார் ஐயன் ஐயனாரே” (4.38.1)
கங்கை நதியை தனது சடைமுடியினில் வைத்து அடக்கியவர் சிவபெருமான் என்று இப்பாடல் புகழ்கிறது. மற்றொரு பாடலில்;
“அலையார் புனர்கங்கை அங்கையாட அணிஇழைநன் மங்கையோர் பங்கன்ஆடி” – (6.72.1)
அலைகளை உடைய கங்கையை சடையில் தாங்கியவர் என்று இந்த பாடல் விவரிக்கிறது. கபில முனிவரின் சினத்தால், அவரின் கண் பார்வையிலே சகரன் மகன்களை சாம்பலாக்கினார். ஆனால், கங்கை தனது நீரினால் அந்த சாம்பலை கரைத்து அவர்களுக்கு நற்கதி வழங்கினாள். பகீரதனிடம், “நான் வேகமாக கீழே இறங்கினால் அதை தாங்கக் கூடியவர் இருக்க வேண்டும். இல்லையெனில் பூலோகம் அழிந்துவிடும்’’ என்று கூறிய பொழுது, சிவபெருமான் ஆகாயத்தில் இருந்து வேகமாக பூலோகத்திற்கு இறங்கி, கங்கை நதியை கட்டுப்படுத்தி, தனது சடைமுடியில் சிறை வைத்த நிகழ்ச்சியை, அப்பர் பெருமான் மிக அழகாக பாடியிருக்கிறார்.
“கங்கை வார்சடையாய்! கணநாதா!
காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே!
பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!’’
– என்கிறார்
அதே போல், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் ஏழாம் திருமுறையில்;
“கங்கை தாங்கி சடையுடைக் கரும்பே
கட்டியே பலர்க்குங்களை கண்ணே”
– என கங்கையின் பெருமைகளைப் பற்றி பாடி உள்ளார்.
இரண்டாம் குலோத்துங்க சோழர் கட்டடக்கலை
கி.பி 12 – ஆம் நூற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழனால் இந்த கோயில், புனரமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் உள்ளது.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கொண்ட இந்த கோயிலின் மூலவர், `கங்காதேஸ்வரர்’. லிங்கத் திருமேனியில் காணப்படுகின்றார். இக்கோயிலில் சத்திய நாராயண பெருமாள், பிரம்மா, பாணலிங்கம், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, வைத்தீஸ்வரர், குருந்த மல்லீஸ்வரர், காசி விஸ்வநாதர், துர்கை, மகாகாளி, சண்முகர், சூரியன், சந்திரன், வள்ளி தேவயானி சமேதரான சுப்ரமணியர், கணபதி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சமயக் குரவர் நால்வர், நாகராஜர், பகீரதன், சேக்கிழார், பைரவர் ஆகிய தெய்வங்களின் சந்நதிகளும் உள்ளன. 63 நாயன்மார்களின் வெங்கல சிலையும் அமைக்கப்பட்ட தனி சந்நதியும் உள்ளன. புரிசை விருட்சத்தின் அருகில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அங்கு மண் குடங்கள் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற பக்தர்கள் தங்கள் கரத்தினாலே குடத்தில் நீரை மொண்டு, ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யலாம். அவர்கள் எண்ணிய செயல்கள் ஈடேறும் என்று நம்பப்படுகின்றது.
சிறப்புகள்
இக்கோயில், சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த பகுதி முழுவதும் புரிசை மரங்களால் சூழப்பட்டிருக்கும். ஆதலால், இந்த இடத்திற்கு `புரசைவாக்கம்’ என்று பெயர் வழங்கப்பட்டது. புரசை மரத்திற்கு பலாசம், முருக்கு, கிஞ்சுகம் என்னும் பல பெயர்கள் உண்டு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, விதியின் காரணமாக கண்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. திருவெண்பாகத்தில் வந்து ஈசனை வழிபட்டார். பார்வதி தேவியின் கருணையினால், ஈசன் மீண்டும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கண் ஒளி வழங்கினார். இதனால், இத்தலத்தில் உள்ள அம்மனை “மின்னொளி அம்மன்” என்று பக்தர்களால் போற்றப்படுகின்றது. ஸ்தல புராணத்தின் படியே பகீரத சக்கரவர்த்தி, சிவபெருமான நோக்கி தவம் செய்யும் கோலம் மற்றும் கங்காதேஸ் வரர் சிலை 30 அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கருவறை சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. முற்காலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது. தினமும் ஓதுவார் கூடி நின்று சிவபுராணங்கள், தேவாரம் ஆகியவை ஓதப்படுகிறது. பித்துருக்களுக்கு, இக்குளக்கரையில் நீத்தார் கடன் செய்தால், காசிக்கு சென்று செய்த பலன் கிட்டுகிறது.
விழாக்கள்
மாசி மகம், மகாசிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் மற்றும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
மூலவர்: கங்காதீஸ்வரர்,
தாயார்: பங்கஜாம்பாள்,
உற்சவர்: நடராஜர்&சிவகாமி,
தல விருட்சம்: புரிசை,
தீர்த்தம்: கங்காதீர்த்தம்.
நடை திறப்பு: காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 முதல் 8.30 வரை.
அமைவிடம்: கங்காதீஸ்வர் கோயில் செயின்ட், புரசைவாக்கம், சென்னை – 600084.
பொன்முகரியன்
