30-5-2026
முன்னுரை
தமிழ் மாதங்களில் வைகாசி மாதம் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. கோடை காலத்தின் உச்சமாக இருந்தாலும், ஆன்மிக ரீதியாகவும் இயற்கை ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வசந்த காலத்தின் நிறைவுப் பகுதியாக இருப்பதால், மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்ற கனிகள் அதிகளவில் கிடைக்கும் மாதமாகவும் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இறைவனுக்கு ‘தாரா பாத்திரம்’ மூலம் நீர் சொட்டுவது மற்றும் நீர் பந்தல்கள் அமைப்பது போன்ற தான, தர்மங்கள் இந்த மாதத்தில் சிறப்பாகக் கருதப்படுகிறது.“வைகாசி விசாகத்தில் தானம் செய்வது பல மடங்கு புண்ணியத்தைத் தரும்” என்பது முன்னோர்களின் வாக்கு. குறிப்பாக நீர், மோர் மற்றும் அன்னதானம் செய்வது இந்த மாதத்தில் மிகச் சிறந்தது.
வெற்றி தரும் விசாகம்
27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் அற்புதமான நட்சத்திரம். குருவின் நட்சத்திரங்களில் ஒன்று விசாகம்’ என்ற சொல்லுக்கு ‘மேலான கிளை’ அல்லது ‘பிரிந்து செல்லுதல்’ என்று பொருள் உண்டு. வானவியலில் இது ஒரு துலாக்கோல் (தராசு) போன்ற அமைப்பைக் கொண்டது. அதனால் தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதிகளாகவும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன் மற்றும் அக்னி. இந்திரன் தலைமைப் பண்பையும் செல்வாக்கையும் குறிக்கிறார். அக்னி: தூய்மையையும் ஆற்றலையும் குறிக்கிறார். இந்த இருவரின் அம்சமும் பொருந்தியிருப்பதால், விசாக நட்சத்திரம் ‘வெற்றி தரும் நட்சத்திரமாக’ கருதப்படுகிறது
எல்லா தெய்வங்களுக்கும் உரியது
விசாக நட்சத்திரம் நான்கு நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இதனால்தான் அதிக ஒளியுடனும் சக்தியுடனும் திகழ் கிறது. அதைப்போல வைகாசி விசாகம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் உரியது எனச் சுருக்கிவிட முடியாது. சைவத்தில் முருகனுக்கும், வைணவத்தில் நம்மாழ்வாருக்கும், பௌத்தத்தில் புத்தருக்கும் உரியதாக உள்ளது. மனிதாபி மானம், ஞானம் மற்றும் அகிம்சை ஆகிய மூன்றையும் இணைக்கும் பொதுவான சக்தியாகத் திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான பௌத்தர்களுக்கு இது மிக முக்கியமான நாள். புத்தர் பிறந்தது, அவருக்கு ஞானோதயம் கிடைத்தது, அவர் முக்தி (நிர்வாணம்) அடைந்தது என இம்மூன்றுமே வைகாசி பௌர்ணமி மற்றும் விசாக நட்சத்திரத்தில்தான் நிகழ்ந்தன. சமணத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர், தனது நீண்டகால தவத்திற்குப் பிறகு ‘கேவல ஞானம்’ (முழுமையான அறிவு) பெற்ற தினமாகக் கருதப்படுவது வைகாசி மாதத்தின் வளர்பிறை காலத்தில்தான். “அறிவு மற்றும் ஞானம்” என்ற புள்ளியில் எல்லாச் சமயங்களும் இந்த விசாக நட்சத்திரத்தில் ஒன்றாக இணைகின்றன.
வைகாசி விசாகத்தின் வானியல்
சித்திரையில் உச்சம் பெற்ற சூரியன், வைகாசியில் தனது நண்பரான சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் நுழைகிறார். சூரியன் ஒரு ஜாதகத்தில் ‘ஆன்மா’ மற்றும் ‘தந்தை’யைக் குறிப்பவர். தந்தை (சிவன்) தனது ஆற்றலை வெளிப்படுத்தும் காலம் இது. ரிஷபத்திற்கு நேர் ஏழாம் வீடான விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போதுதான் பௌர்ணமி நிகழ்கிறது. சந்திரன் ‘மனம்’ மற்றும் ‘தாய்’ (சக்தி) ஆகியவற்றைக் குறிப்பவர். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவார் என்றாலும், அதன் நேர் எதிர் வீடான விருச்சிகத்தில் அவர் அமர்ந்து சூரியனைப் பார்க்கும் போது, அங்கே “சிவசக்தி ஐக்கியம்” பரிபூரணமாக நிகழ்கிறது. விருச்சிகம் என்பது செவ்வாயின் (வீரம்/சக்தி) வீடு. அங்கே குருவின் நட்சத்திரமான விசாகத்தில் சந்திரன் நுழைகிறார். இந்த நாள் தான் வைகாசி விசாகம்.
இந்த ஆண்டு வைகாசி விசாகம்
இந்த ஆண்டு வைகாசி விசாகம், வைகாசி மாதம் 16-ஆம் தேதி,(30.5. 2026) சனிக்கிழமை சதுர்த்தசிக்குப் பின் பௌர்ணமி கூடிய நன்னாளில் வருகிறது. மதியம் 12:00 மணிக்கு மேல், விசாக நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணைந்து வருகின்ற அற்புதமான நாளாகத் திகழ்கிறது. இந்த வைகாசி பௌர்ணமியில் என்னென்ன சிறப்புக்கள் தெரியுமா?
. இது முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான திருவிழா நாளாகும்.
. பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவராகக் கருதப்படும் நம்மாழ்வார் அவதரித்தது இந்த வைகாசி மாதத்தில் தான் (வைகாசி – விசாகம்). வைணவத் தலங்களில் இது “நம்மாழ்வார் திருவவதார உற்சவமாக” கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
. மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் வைகாசி மாதத்தில் தான் நடக்கும். குறிப்பாக வைகாசி (30.5.2026) ‘கருட சேவை’ உலகப் புகழ்பெற்றது.
. மதுரை மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருக்கல்யாணம் சித்திரையில் நடந்தாலும், பல ஆலயங்களில் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவங்களும் திருக்கல்யாணங்களும் நடைபெறுவது வழக்கம்.
முருகனும் வைகாசி விசாகமும்
முருகப்பெருமானின் அவதார தினம்
வைகாசி மாதத்தின் சிறப்பு வைகாசி விசாகம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகளாகத் தோன்றி, முருகப் பெருமான் அவதரித்த தினம் இதுவே. சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, பின் அன்னை பார்வதியால் அணைக்கப்பட்டு ‘ஆறுமுகனாக’ உருப்பெற்ற நாள் வைகாசி விசாகம். தீமையை அழித்து நன்மையைக் காக்க இந்த நட்சத்திரத்தில்தான் ஞானக்குழந்தை அவதரித்தது.அறியாமை எனும் இருளை நீக்க, ஞானம் எனும் ஒளி பிறந்த தினமாகச் சைவம் இதைப் பார்க்கிறது. தர்மத்தை நிலைநாட்ட ஒரு தெய்வீக ஆற்றல் உருவான நாளாக போற்றப்படுகிறது. விருச்சிகம் என்பது செவ்வாயின் (வீரம்/சக்தி) வீடு. அங்கே குருவின் நட்சத்திரமான விசாகத்தில் சந்திரன் நுழைகிறார்.சூரியன் (தந்தை) + சந்திரன் (தாய்) + குரு (ஞானம்) + செவ்வாய் (களத்தின் நாயகன்) – இந்த நான்கு சக்திகளும் இணையும் புள்ளியில் தான் முருகன் எனும் மகாசக்தி உருவாகிறது.
முருகன் ஆலயங்களில் விழா
வைகாசி விசாகத்தன்று, சூரியனாகிய சிவன் (எல்லா உலக உயிர்களுக்கும் தந்தை), சர்வலோக மாதாவாகிய, சந்திரனை, தன்னுடைய நெருப்பாகிய அக்னிக் கண்ணால் (நெற்றிக்கண்) பார்க்க, அங்கே ஞான சூரியனாக, முருகப் பெருமான் தோன்றிய நாள்தான் விசாக நட்சத்திரம். தந்தையின் ஒளியும், தாயின் அன்பும், குருவின் வழிகாட்டுதலும், செவ்வாயின் வீரமும் இணைந்து உருவானவர் தான் “சண்முகன்”. விசாகம் குருவுக்குரிய நட்சத்திரம் என்பதால். முருகப்பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்யும் ஞான பண்டிதனாக விளங்கியதையும் புராணங்களின் மூலம் பார்க்கிறோம். அதே சமயம் இந்த நிகழ்வு, செவ்வாய் வீட்டில் (விருச்சிகம்) நிகழ்வதால், செவ்வாய்க்குரிய வீரம், கருணை, தேவ சேனாதிபதியாக போருக்கு சென்று, தீமையாகிய சூரனை சம்ஹாரம் செய்ததையும் வைகாசி விசாக நன்னாள் நமக்கு உணர்த்துகிறது. அதனால்தான் எல்லா முருகன் கோயில்களிலும் விசாக நட்சத்திரத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அன்று விரதம் இருக்கிறார்கள்.
முருகனுக்கு தாராபிஷேகம்
எல்லா முருகன் கோயில்களிலும், சிவன் முருகன் சந்நதிகளிலும், விசாகப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். சிறிய ஊர்களில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கூட, மக்கள் பால்குடம், காவடி எடுத்தல் முதலிய நேர்த்திக்கடன்களை விரதமிருந்து செலுத்துவார்கள். முருகனின் மலைக் கோயில்கள் மற்றும் அறுபடை வீடுகளில், இந்த உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். தமிழகத்தைத் தாண்டி வடமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகத் திருவிழாவை கொண்டாடுவார்கள்..வைகாசி விசாகத்தன்று பெரும்பாலான முருகன் கோயில்களில் ‘வள்ளி கல்யாணம்’ நடைபெறும். மேலும், கோடை காலம் என்பதால் முருகனுக்கு வெப்பத்தைத் தணிக்க தாராபிஷேகம் (சிலைக்கு மேல் பாத்திரத்தில் நீர் சொட்டுவது) செய்யப்படுவதைக் காண்பதே ஒரு பரவசம்.
திருச்செந்தூர்வைகாசி விசாகம்
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வைகாசி விசாகம் என்பது வருடத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தத் தலத்தில், முருகப்பெருமான் “ஞானத்தின் வடிவாக” வீற்றிருப்பதால், விசாகத்தன்று இங்கு வழிபாடு செய்வது கோடி புண்ணியம் தரும். திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வெறும் ஒருநாள் நிகழ்வு அல்ல; இது 10 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவமாகும். 10 நாள் வசந்தோற்சவமாக மே 21 முதல் தொடங்கி மே 30 வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
தலையா? கடல் அலையா?
வைகாசி விசாகத்தன்று அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர்.விசாகத்தன்று அதிகாலையிலேயே பக்தர்கள் திருச்செந்தூர் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடுவார்கள். கடல் அலைகளின் ஓசை ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை ஒலிப்பதாகக் கருதப்படும் இந்தத் தலத்தில், விசாகத்தன்று நீராடுவது பாவங்களை நீக்கி மனத்தூய்மை தரும்.
வசந்த உற்சவம்
வைகாசி மாதத்தின் வெயிலைத் தணிக்கும் விதமாக, முருகப் பெருமானுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். கோயிலின் வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுவார்.அவரைச் சுற்றி நீர் நிரப்பப்பட்ட அகழிகள் அமைக்கப்பட்டு, குளிர்ச்சியான சூழலில் ஆராதனைகள் நடக்கும். இது காண்பதற்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். விசாக நட்சத்திரத்தன்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர், சுவாமிக்கு விசேஷமான சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். முருகனின் திருமுகம் இந்தச் சந்தனக் காப்பில் ஜொலிப்பதைக் காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, சண்முகர் (முத்துக்குமார சுவாமி) வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார். அப்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள். கோடையின் வெப்பம் நீங்கப் பன்னீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது இங்கு மிகவும் விசேஷம். திருச்செந்தூரில் விசாகத்தன்று அன்னதானம், நீர் மோர் வழங்குவது பெரும் பேறு அளிக்கும்.
பழனியில் தேரோட்டம்
முருகன் என்றாலே பழனி நினைவுக்கு வரும். ஞான பண்டிதனாக கட்சி தரும் முருகனுக்கு இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் சந்நதியில் இப்பெருவிழா நடைபெறும்.மே 24 (ஞாயிறு): கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடக்கமாகிறது. மே 24 – மே 29: வரை திருவிழாவின் 7-ஆம் நாளான மே 30, 2026 (சனி) அன்று மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி தங்கப் பல்லக்கு, தங்க மயில், ஆட்டுக்கடா, வெள்ளி மயில் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் சிகரமாக மே மாதம் 30 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். காலைதிருத்தேர் ஏற்றம் (சுவாமி தேரில் அமர்தல்) நடைபெறும். மாலை (சுமார் 4:00 மணி)திருத்தேர் வடம் பிடித்தல் (தேரோட்டம் தொடக்கம்) ஆரம்பமாகும். இரவு,பெரிய தந்தப் பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா 2026, மே 30-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அவதார நாளான அன்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாகக் கொறடு மண்டபத்தில் பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு
வழிபாடுகள் நடைபெறும். வசந்த மண்டபத்தில் சுவாமி ஊஞ்சல் சேவை உண்டு.திருப்பரங்குன்றத்தில் மூலவர் குடைவரைச் சிலையாக இருப்பதால், அவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, உற்சவரான சண்முகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று விடிய விடிய பாலாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் கொண்டு வரும் குடம் குடமான பால், சண்முகருக்கு அபிஷேகமாக செய்யப்படும்.
விசாகத் தேர்
வைகாசி விசாகத் திருவிழாவின் போது, முருகப்பெருமான் உலக நன்மைக்காகவும், அசுரர்களை வதம் செய்ய ஆற்றல் பெறவும் தவம் செய்யும் பாவனையில் (கம்பத்தடி மண்டபத்தில் ‘தபசு’ இருத்தல்) சடங்குகள் நடத்தப்படும். திருப்பரங்குன்றத்தில் பெரிய தேர் சித்திரைத் திருவிழாவின் போது இழுக்கப்படும். ஆனால், வைகாசி விசாகத்தன்று, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சிறிய தேரில் (சப்பரம்) எழுந்தருளி கிரிவலப் பாதையில் உலா வருவார். இது “விசாகத் தேர்” என்று அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் புனித நீராடி விட்டு ,முருகனுக்கு உகந்த பன்னீரைக் காவடியாகச் சுமந்து வருதல். நாக்கு மற்றும் கன்னங்களில் வேல் வடிவிலான அலகுகளைக் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துதல். தலையில் பாற்குடம் ஏந்தி கிரிவலப் பாதையைச் சுற்றி பால் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளைக் காண மெய் சிலிர்க்கும். விசாகத் திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக முருகப்பெருமான் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து “வையாளி” (குதிரை ஓடும் வேகம்) காட்டும் நிகழ்ச்சி நடைபெறும். திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவணப் பொய்கை மிக முக்கியமானது. விசாகத்தன்று இந்தப் பொய்கைக்குச் சிறப்புப் பூசைகள் செய்யப்பட்டு, அங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுவதும் ஒரு முக்கியமான நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.
திருத்தணியில் வைகாசி விசாகம்
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் (ஐந்தாம் படைவீடு), வைகாசி விசாகத் திருவிழா மற்ற படை வீடுகளைப் போலவே மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். திருத்தணியில் வைகாசி விசாகத்தன்று அதிகாலை முதலே மூலவருக்கும், உற்சவரான சண்முகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். குறிப்பாக, பன்னீர் அபிஷேகம் இங்கு மிகவும் பிரபலம். அன்று முழுவதும் சுவாமிக்குத் தங்கக் கவசம் அல்லது வைரம் போன்ற விலைமதிப்பற்ற ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருத்தணி முருகனுக்கு லட்சார்ச்சனை (ஒரு லட்சம் நாமங்களைக் கூறி அர்ச்சித்தல்) நடைபெறும்.
மலர் வழிபாடு
திருத்தணி என்றாலே மலர் வழிபாடு (புஷ்பாஞ்சலி) விசேஷமானது. விசாகத்தன்று டன் கணக்கிலான வண்ண மலர்களால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். திருத்தணியில் மொத்தம் 365 படிகள் உள்ளன. விசாகத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு படி ஏறும்போதும் உணர்ச்சிகரமாக, “முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டு மலை ஏறுவார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் (திருவள்ளூர், காஞ்சிபுரம்) இருந்தும், ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாற்குடம் மற்றும் புஷ்ப காவடி ஏந்தி வருவார்கள். இரவு வேளையில், வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமான் மாட வீதிகளில் உலா வருவார். திருத்தணியில் மலைப் பாதையில் சுவாமி உலா வரும் காட்சியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
மற்ற முருகன் தலங்களில் வைகாசி விசாகம்
அறுபடை வீடுகள் தவிர, தமிழகத்தில் இன்னும் சில தலங்களில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பழமை வாய்ந்த சடங்குகளுடனும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது.“சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்” என்பது பழமொழி. வைகாசி விசாகத்தன்று இங்கு சிங்காரவேலவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அறுபடை வீடுகளுக்கு இணையாக இங்கு காவடிகள் மற்றும் பாற்குடங்கள் வந்து குவியும். சென்னையில் வைகாசி விசாகம் என்றாலே வடபழநி தான் நினைவுக்கு வரும். இங்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். தேரோட்டம் மற்றும் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் ‘திருப்பாவாடை’ எனும் பெருமளவிலான அன்னதானப் படைப்பு இங்கு மிக விசேஷம்.
எத்தனை தலங்களில்எத்தனைச் சிறப்பு?
கிருபானந்த வாரியார் சுவாமிகளால் போற்றப்பட்ட வயலூர் (திருச்சி) தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விசாகத்தன்று மூலவருக்கு நடைபெறும் லட்சார்ச்சனை மற்றும் இரவு நடைபெறும் மயில் வாகன வீதி உலா மிகப்புகழ் பெற்றது. அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் முக்கியமான தலம் எட்டிக்குடி முருகன் கோயில் (நாகப்பட்டினம்). பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்வதும், சித்திரக் காவடிகள் எடுப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
விசாகத்தன்று இங்கு ‘சத்ரு சம்ஹார ஹோமம்’ போன்ற சிறப்புப் பூஜைகள் நடைபெறும். சென்னை அருகில் சிறுவாபுரி பால சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. வீடு கட்ட நினைப்பவர்கள் அதிகம் செல்லும் தலம் இது. வைகாசி விசாகத்தன்று இங்கு முருகனுக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் (காஞ்சிபுரம்) கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட புனிதத் தலம். இங்கு வைகாசி விசாகம் 10 நாட்கள் பிரம்மோற்சவமாக நடைபெறும். இங்கு ‘மாவடிச் சேவை’ மற்றும் தேரோட்டம் காஞ்சிபுரம் மக்களிடையே மிகவும் பிரபலம்.கொங்கு மண்டலத்தில் பழனிக்கு அடுத்து வைகாசி விசாகம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இடம் மருதமலை.
மலைக்கோயிலில் காவடிகள் ஆட்டம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் களைகட்டும்.
