பண்ணாரி அம்மன் கோயில் விழா மறுபூஜையுடன் நிறைவு : திரளான பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலம்:  பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா நேற்று மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 12ம் தேதி அதிகாலை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 19ம் தேதி அதிகாலை நடந்த குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லட்சக்கணக்காண பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து மாவிளக்கு, பூஜை, புஷ்ப பல்லக்கு ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா, திருவிளக்கு பூஜை, தங்கரதம் வலம் வருதல் என தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிலையில் குண்டம் திருவிழாவின் இறுதியாக மறுபூஜை திருவிழா நேற்று காலை துவங்கியது. இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கோயிலுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவி வழிபட்டனர். மறுபூஜை முன்னிட்டு சத்தியமங்கலம் டிஎஸ்பி., சுப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Related Stories: