சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2வது வார பூச்சொரிதல் விழா கோலாகலம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 2வது வாரம் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அம்மனுக்கு சாற்றுவதற்காக பூக்கள் எடுத்துச் சென்றனர். தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டுத் தலங்களில் சிறப்புபெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன்கோயிலாகும். சமயபுரம் மாரியம்மன் இப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள். தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோயிலில் இரண்டாமிடத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் விழாக்கள் சிறப்பு முக்கியத்துவம் கொண்டவையாகும்.

மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன் உலக மக்களின் நன்மைக்காக தானே விரதமிருந்து அருள்புரிவதாக ஐதீகம். இந்த விரதம் அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் என அழைக்கப்படுகிறது. இந்நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் தவிர்க்கப்படுகின்றன.

பூஜா காலங்களில் துள்ளுமாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே நிவேதனம் செய்விக்கப்படுகின்றன. பங்குனி மாதத்தில் வரும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பூச்சொரிதல்கள் நடத்துகின்றனர். எனவே இக்கோயிலில் பங்குனி ஞாயிற்றுக்கிழமைகள் எல்லாவற்றிலும் பூச்சொரிதல்கள் நடைபெறுகின்றன. இதில் முதலாவது பூச்சொரிதல் கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று 2வது வார பூச்சொரிதல் நடந்தது. இதையொட்டி திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் பூக்களை எடுத்து கொண்டு கோயிலுக்கு சென்று அம்மனுக்கு சாத்தப்பட்டது.

Related Stories: