பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்தனர்

குளச்சல்: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் தினமும் ஆன்மீக பேருரை, பக்தி பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சொற்பொழிவு போட்டி நடந்தது. விழாவின் 3 ம் நாள் முதல் காலை மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளி வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கேரளா மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

கேரளாவிலிருந்து  பெண் பக்தர்கள் இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுகின்றனர். 6ம் நாள்  நள்ளிரவு முக்கிய வழிபாடான மகாபூஜை என்னும் வலிய

படுக்கை பூஜை நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் ஆனதால் காலை முதலே உள்ளூர் பக்தர்கள் அதிகமாக மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் நண்பர்கள், உறவினர்களுடன் அருகில் உள்ள தோப்புகளில் கூட்டமாக பொங்கலிட்டனர். பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடற்கரை சாலை, பொங்கலிடும் பகுதி, கோயில் வளாகம் ஆகிய இடங்கள் களைக்கட்டியது.  

மாலை காட்டுவிளை ஆதி திராவிடர் காலனி சிவசக்தி கோயிலிலிருந்து யானை மீது களபம்  சந்தன குடம் மற்றும் செம்பொன்விளையிலிருந்து யானை மீது களபம், சந்தன குடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு வந்தது. 9ம் நாளான இன்று திங்கள்கிழமை காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு உஷ பூஜை, காலை 7 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி ஊர்வலம்  வந்தடைகிறது. 9.30க்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் இரணியலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் பவனி, மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30க்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு  பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனியுடன் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது.

Related Stories: