ஈசனை பூஜித்த விலங்குகள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் அம்பிகை பசு வடிவில் ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் இத்தலத்து அம்பிகை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.

திருச்சி, திருவெறும்பூரில் ஈசனை, எறும்புகள் பூஜித்தது. இன்றும் பூஜையின்போது இறைவனை வணங்கி பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் நிகழ்கிறது.

திருச்சி முசிறி அருகேயுள்ளது திருஈங்கோய்மலை. இத்தலத்து இறைவனை, ஈ பூஜித்து பேறு பெற்றது.  இங்கு யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) பூஜை, ஹோமங்கள் செய்கின்றனர்.

தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை சிட்டுக்குருவி பூஜித்தது.  அந்த சிட்டுக்குருவிக்கு ஈசன் மோட்சப் பதவி அளித்தார். இத்தலத்து ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக வணங்கப்படுகிறார்.

தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கரப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.

தஞ்சாவூர், பட்டீஸ்வரம் தலத்து இறைவனை காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்டது. இதனால் இத்தலத்துக்கு பட்டீஸ்வரம் என பெயர் வரலாயிற்று.

தஞ்சாவூர், கபிஸ்தலத்தில் அருளும் கஜேந்திரவரதரை, சாபத்தால் யானையாக மாறிய இந்திரத்யும்னன் என்பவனும், முதலையாக மாறிய கந்தர்வனும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருந்துதேவன்குடி தலத்து இறைவனை சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் வணங்கி பேறு பெற்றான். இதன் காரணமாக இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர்.

திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம் பெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் தலத்து ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு பூஜித்தது.

திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் வந்து ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அம்பிகை சாபம் காரணமாக மயில் உருவில் பூஜை செய்த தலம், இங்கு ஈசனின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு த்ரிதளமாக உள்ளதும் நடராஜர் கௌரி தாண்டவம் ஆடுவதும் தனிச் சிறப்புகள்.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் இறைவனை ஜடாயு வழிபட்டு பேறு பெற்றது.

சேலத்தில் சுகவனேஸ்வரரை கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்து அருள் பெற்றார்.  

திருக்கழுக்குன்றம் இறைவனை கழுகு பூஜை செய்து பேறு பெற்றது. நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.

காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகேயுள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவனமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உருமாறிய முனிவர் இங்கு இறைவனை பூஜித்தார்.

காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் அணில், குரங்கு, காகம் மூன்றும் பூஜித்து நன்மையடைந்த தலம்.

திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும், சாபவிமோசனம் பெற்ற தலம் இது.

திருக்காளத்தி இறைவனை சிலந்தி பூஜித்து முக்தி பெற்றது.

    

- ந. பரணிகுமார்

Related Stories: