பருத்தியில் வாடல்நோய் பாதிப்பு-வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர்கள் முனைவர் பெரியார் ராமசாமி மற்றும் கமலசுந்தரி ஆகியோர் பருத்தியில் வாடல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட வயல்களை ஆய்வு செய்தனர்.இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறும்போது, வாடல்நோய் தாக்கப்பட்ட பருத்தி செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாகவும், பிறகு பழுப்பாகவும் மாறி இலைக்காம்புகளின் மீதும் பழுப்பு நிற வளையத்தைக் காணமுடியும். வளர்ந்த செடிகளில் இதுபோன்ற நோய் தாக்கத்தினால் அடிப்பாகத்தில் உள்ள முதிர்ந்த இலைகள் அனைத்தும் ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக மாறி பிறகு வாடி உதிர்ந்து விடும்.தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து வருவதை காணமுடியும். மேலும் வாடல் நோய் தாக்கப்பட்ட தண்டின் அடிப்பகுதியில் கருமையாகவும், அவற்றை உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் இருப்பதை காணமுடியும். வாடல்நோய் தாக்கப்பட்ட பருத்தி வயல்களில் இருந்து அடுத்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த வாடல்நோய் மண் மூலம் பரவக்கூடியது.பொட்டாசியம் உரத்தை செடிகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். செயற்கை பூஞ்சானக் கொல்லி ஆன கார்பன்டாசிம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தாக்கப்பட்ட செடிகளின் தூர்கள் நனையும்படி மண்ணில் ஊற்ற வேண்டும். மேலும் அருகாமையில் உள்ள செடிகளுக்கும் இந்த செயற்கை பூஞ்சானக் கொல்லியை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.வயல்வெளி ஆய்வின்போது, திருவாரூர் மாவட்ட கிராமங்களான அன்னியூர், பெரும்பண்ணையூர், வேலங்குடி, கொரடாச்சேரி போன்ற கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்….

The post பருத்தியில் வாடல்நோய் பாதிப்பு-வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: