ஓஸ் பெர்கின்ஸ் இயக்கத்தில் மைகோ மன்றொ மற்றும் நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹாரர் படம் லாங்லெக்ஸ். 1970, ஒரேகன் மாநிலத்தின் சீரியல் குடும்ப கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் குடும்பத்தின் தலைவர்கள் கையாலேயே மொத்த குடும்பமும் கொலை செய்யப்பட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. இதை விசாரணை செய்யும் இன்வெஸ்டிகேஷன் ஏஜெண்ட் லீ ஹார்கர் ( மைகா மன்றோ) மற்றும் போலீஸ் குழு.
ஏன் இந்த கொலைகள் நடக்கின்றன எதனால் குடும்பத்தின் தலைவர்களே மொத்தக் குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் இறந்து விடுகிறார்கள் என்பது புரியாமல் தவிக்கும் காவல்துறை. யார் இதற்கெல்லாம் காரணம் பின்னணி என்ன எப்படி இந்த குடும்பத் தலைவர்கள் மனங்கள் மாற்றம் அடைகின்றன என பல கேள்விகளுடன் இறுதியில் வைக்கப்படுகிறது ஹாரர் கிளைமாக்ஸ். படம் முழுக்கவே மைகா மன்றோ மற்றும் நிக்கோலஸ் கேஜ் இருவருடன் தான் பயணிக்கிறது. உடன் செவிலிய தாயாக வரும் அலிசியா விட். ஒரு பக்கம் அன்னையின் மனநிலை பிரச்சனை, இன்னொரு புறம் குழப்பமான கொலை வழக்கு விசாரணை அதற்கான தேடல் என மைகா மன்றோ தனது கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார்.
ஆக்சன் அதிரடி என பார்த்துப் பழகிய நிக்கோலஸ் கேஜ் இந்த படத்தில் அவர்தானா என கேள்வி எழுப்பும் அளவிற்கு வித்தியாசமான கெட்டப் மற்றும் நடிப்பில் மிரட்டுகிறார். ஹாரர், ஷாக் மட்டுமின்றி உடன் புதிர்கள் தேடிப் பயணம் என படம் முழுக்க மூளைக்கும் வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஓஸ் குட் பெர்கின்ஸ். ஆனால் என்ன யோசித்தாலும் என்னவோ நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் ராட்சசன் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அண்ட்ரஸ் அரோச்சி ஒளிப்பதிவும், ஸில்கி இசையும் ஒன்றிணைய படத்தின் காட்சிகள் மேலும் மிரட்டுகின்றன. கலை இயக்குனர் குழுவுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
படத்தில் வரும் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நம்மை மிரட்டுகின்றன. மேலும் கொலை காட்சிகளும், இன்வெஸ்டிகேஷன் அறைகளும் இன்னும் மிரட்சிகளை உண்டாக்குகின்றன. மொத்தத்தில் ஹாரர் பட விரும்பிகள் தவிர்க்காமல் சென்றால் நிச்சயம் ஏமாற்றாது இந்த ‘லாங்லெக்ஸ்’
The post லாங்லெக்ஸ் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.