விசாரணை நீதிமன்றங்களில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க உத்தரவு

மதுரை: விருதுநகரைச் சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2018ல் ஐகோர்ட் கிளையில் மனு செய்தேன். அப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த வழக்கு தள்ளுபடியானது. அந்த இறுதி அறிக்கையின் நகலை கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஆனால், இறுதி அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே, நீதிமன்றத்தில் தவறான அறிக்கையளித்த முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நீதிபதி முன் ஆஜராகி, ‘‘விசாரணை நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போது நீதிமன்ற பணியாளர்கள் உடனடியாக ஏற்பதில்லை. ஏற்றுக்கொண்டாலும் ஒப்புகைச் சீட்டு வழங்குவதில்லை. காவல் துறையினருக்கு, நீதிமன்ற பணியாளர்கள் போதுமான அளவு ஒத்துழைப்பதில்லை’’ என்றார்.இதையடுத்து நீதிபதி, ‘‘விசாரணை நீதிமன்றங்களில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்போது அதனைப் பெற்றுக்கொண்டதும் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். அதில், தேதி, நேரம் மற்றும் நீதிமன்ற முத்திரை இட்டு உரிய நபரின் கையெழுத்துடன் போலீசாருக்கு வழங்க வேண்டும். அதே நேரம், இறுதி அறிக்கையில் தவறோ, திருப்பி கொடுக்கவோ வேண்டியிருந்தால் அதற்கான காரணத்தை குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும். இது தொடர்பான நிலை அறிக்கையை ஐஜி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்….

The post விசாரணை நீதிமன்றங்களில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: