இஸ்லாமாபாத்: துபாயில் கவலைக்கிடமான நிலையில் உள்ள பர்வேஸ் முஷாரப்பை, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர பாகிஸ்தான் ராணுவம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தானை ஆட்சி செய்த சர்வாதிகாரியான அதிபர் பர்வேஸ் முஷாரப் (78), தேச துரோக வழக்கில் குற்ற சாட்டுக்கு ஆளானார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த முஷாரப், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நகரான துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நாளுக்கு நாள் அடுத்தடுத்த உடல் உறுப்புகள் பலகீனம் அடைந்து வந்தன. குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக அவரது நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. ‘அமிலாய்டோசிஸ்’ என்ற நோய் அவரை பாதித்திருப்பதால், அவரை மீட்பது கடினமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முஷாரப்பை துபாய் மருத்துவமனையில் இருந்து பாகிஸ்தான் அழைத்து வர பாகிஸ்தான் ராணுவம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஆபத்தான நிலையில் இருக்கும் முஷாரப்பை பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக முஷாரப்பின் குடும்பத்தினரிடம் ராணுவம் பேசியுள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாகிஸ்தான் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post துபாயில் கவலைக்கிடமான நிலையில் உள்ள முஷாரப்பை ஏர் ஆம்புலன்சில் பாக். அழைத்து வர ஏற்பாடு: குடும்பத்தினருடன் ராணுவம் ஆலோசனை appeared first on Dinakaran.