செய்யாறு அருகே ஏரியிலிருந்த ஈச்ச மரங்கள் அனுமதியின்றி கடத்தல்: வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

செய்யாறு: செய்யாறு அடுத்த தென்மாவந்தல் கிராமத்தில் ஏரியிலிருந்த 20க்கும் மேற்பட்ட ஈச்ச மரங்களை சட்ட விரோதமாக ேவரோடு பெயர்த்தெடுத்து லாரியில் கடத்த முயன்றதை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தி வாகனத்தை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தென்மாவந்தல் கிராமத்தில் உள்ள கம்மந்தாங்கல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சுமார் 15 அடி உயரம் கொண்ட 20க்கும் மேற்பட்ட ஈச்ச மரங்களை 10 பேர் கொண்ட கும்பல் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் வேறோடு பெயர்த்தெடுத்து லாரியில் கடத்த முயன்றதை கண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம வருவாய் ஆய்வாளர் வினோத் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஆகியோர் மரங்களை லாரியில் ஏற்றுவதை தடுத்து நிறுத்தி மரங்களை வேறோடு பெயர்தெடுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மரங்களை வேரோடு பெயர்த்தவர், செங்கல்பட்டு தாலுக்கா அச்சரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும் அவருக்கு தென்மாவந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் சிலரும் சேர்ந்து அரசிடம் எவ்வித அனுமதியும் வாங்காமல் விற்றது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து இச்சம்பவம் குறித்து செய்யாறு தாசில்தாருக்கும் அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி அரசு அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்த பாண்டுரங்கன் தலைமையிலான  10 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனக்காவூர் போலீசில் எழுத்து மூலமாக புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து செய்யாறு தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்….

The post செய்யாறு அருகே ஏரியிலிருந்த ஈச்ச மரங்கள் அனுமதியின்றி கடத்தல்: வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: