அம்பை அருகே ஆவணித் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம்

அம்பை: அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி  ஆவணித் திருவிழாவின் 9வது நாளான நேற்று பால்குடம் சந்தன குடம் ஊர்வலம் நடந்தது.இதில் திரளானோர் பங்கேற்றனர். தேரோட்ட வைபவம் இன்று (10ம் தேதி) நடக்கிறது. வாகைகுளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்  திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா  கடந்த மாதம் 31ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அய்யா சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அன்பு கொடி மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அத்துடன் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் அன்ன தர்மம் நடந்து வருகிறது. 8ம் திருநாளான நேற்று முன்தின்ம்  அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது.

9ம் திருநாளையொட்டி விரதம் இருந்த அன்பு கொடி மக்கள் பால் கிணற்றிலிருந்து செண்டை மேளம் முழங்க பால்குடம், சந்தன குடங்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவந்தனர். ஊர்வலத்தில் வாகைகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் இன்று (10ம் தேதி) நடக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அன்பு கொடி மக்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர். அத்துடன் சிறுமியர்களின் கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: