சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி முதல்வருக்கு கோரிக்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்: தங்கபாலு திடீர் பேட்டியால் பரபரப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, இன்று காலை திடீரென அவசர பத்திரிகையாளர் சந்திப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டினார். அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படாததால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த சீட்டை தனக்கு ஒதுக்கும்படி கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனாலும் அந்த சீட் ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முக்கிய முடிவுகளை அறிவிக்க போகிறாரோ என்ற பரபரப்பு கட்சியினர் மத்தியில் நிலவியது. இந்நிலையில், தங்கபாலு சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி கூறியதால் காங்கிரசார் மத்தியில் நிலவிய பரபரப்பு நீங்கியது.  இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் சமூக நீதி கொள்கையில் தடம் மாறாத தலைவர். சமூக நீதி கொள்கையை முன்னெடுக்கும் கட்சிகளில் திமுகவும் ஒன்று. தமிழக சட்டமன்றத்தை கூட்டி அங்கு அனைத்து கட்சி ஆதரவோடு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அனைத்து சமூக மக்களுக்கும் சரிக்கு சமமாக இணையாக வழங்குவதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு உதவும். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். தமிழக முதல்வர் இதற்கு முன் முயற்சி எடுக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து தலைவர்களையும் இதற்காக நான் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.இவ்வளவு அவசர சந்திப்பு எதற்காக? நீங்கள் தனியாக வந்து எங்களை சந்தித்தது ஏன்? என்று நிருபர்கள் கேட்ட கேள்வி  அவர் அளித்த பதிலளித்து கூறுகையில், ‘‘பொதுவான பிரச்னை இது. எல்லா கட்சிகளுக்குமான பிரச்னை. நான் தனிப்பட்ட முறையில் காங்கிரஸ்காரன். அதில் எந்தவித  சந்தேகமும்  கிடையாது. ஆனால் இந்த பிரச்னை முன்னெடுக்க வேண்டிய இடம் பொதுவெளியில் இருக்க வேண்டும். தனிப்பட்ட கட்சிக்கு இது சொந்தமானது இல்லை. எல்லா கட்சியினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால், அதன் தேவை கருதி இங்கு உங்களை சந்திக்கிறேன். நான் முதலில் பிறப்பால் காங்கிரஸ்காரன். இறுதி மூச்சு வரை காங்கிரசில் தான் இருப்பேன். எத்தனையோ பேர் காங்கிரசில் இருந்து வெளியேறினார்கள். நான் ஒரு போதும் அப்படி செய்ததில்லை. அந்த நிலையில் இருந்து என்னை யாரும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்….

The post சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி முதல்வருக்கு கோரிக்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்: தங்கபாலு திடீர் பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: