கல்வியில் தடை ஏற்படுத்தும் கிரகங்கள் எவை?

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வார்கள். இது அந்தக்காலச் சொற்றொடர். இக்காலத்தில் சிறப்பு மட்டும் அல்லாது செழிப்பையும், வளமான வாழ்க்கையையும் வாரிக் கொடுக்கிறது கல்வி. இக்கல்வியில் ஆரம்பம் முதல் கடைசி வரை எந்தவிதமான தடைகள், இடையூறுகள் இல்லாமல் படித்து முடித்து கேம்பஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து நல்ல வேலையில் அமர்ந்து விடுவார்கள். சிலருக்கு பலவகைகளில் பிரச்னைகள், மதிப்பெண் குறைவு, அரியர்ஸ், விருப்பமின்மை, உடல்நலக்குறைவு என பலவகைகளில் கல்வியில் தடை ஏற்பட ஜாதகத்தில் கிரகதோஷங்கள், தசாபுக்திகள், கோச்சார அமைப்புகள் காரணமாக இருக்கின்றது. கல்லூரியில் சேரும் காலம் வரை சாதகமான தசை நடந்து கொண்டிருக்கும். அதன் பிறகு தொடங்குகின்ற நீச்ச கிரக தசைகள், 6, 8, 12 ஆம் அதிபதி, அதன் சம்பந்தப்பட்ட கிரக தசைகள் காரணமாக தடைகள் தோல்வி ஏற்படுகிறது. புதன் நீசமாகி அல்லது பலம் குறைந்த தசை வந்தால் படிப்பில் நாட்டம் குறையும். ஞாபக சக்தி குறையும், மனம் சஞ்சலமாக இருக்கும், மறதி, குழப்பங்கள் தோன்றும்.

Advertising
Advertising

பரீட்சை நடக்கும் காலக்கட்டத்தில் 6, 8, 12 ஆம் அதிபதி தசைகள் வந்தால் பிரச்னைகள் பலவகையில் உருவெடுக்கும். நான்காம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, சனி, செவ்வாய், கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை தாக்கம் காரணமாக எதிர்பாராத விபத்து, மனநலம், உடல்நலம் பாதிப்பு, குடும்ப சூழ்நிலை பாதிப்பு என தடைகள் வரும். கல்லூரி வாழ்க்கையில் 2, 5, 7, 8 ஆகிய இடங்களின் சம்பந்தம் பெற்ற தசாபுக்திகள் நடைபெறும்போது சந்திரன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் பார்வை சரியில்லாமல் போனால் காதல் களியாட்டங்களில் ஈடுபட வைக்கும். சபல சஞ்சல மனம் உண்டாகும். நீச்ச சுக்கிரன், நீச்ச புதன், பலமில்லாத தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்களால் தீயோர் நட்பு, சேர்க்கை, கேளிக்கைகள், போதை, மதுபழக்கம் தேவையற்ற விஷயங்களில் மனம் செல்லும்.கோச்சார கிரக நிலைகள் என்று சொல்லப்படும் கிரகபெயர்ச்சிகள். அதாவது 7½ சனி, அஷ்டமச் சனி, நான்கில் சனி, ராசியில் ராகுகேது. நான்கில் ராகுகேது. வக்கிர கிரகங்கள் ராசியில், இரண்டில், நான்கில், எட்டில் இருக்கின்ற காலக்கட்டத்தில் கிரக சுழற்சி மாற்றங்களால் மறதி, அசதி, சோம்பல், ஏமாற்றம், கெட்ட சகவாசம் போன்றவைகளால் கல்வியில் தடைகள் ஏற்படும்.

கோச்சார தனயோகம்

இந்தக் கலியுக காலத்தில் எதைச் செய்தாலும் என்ன ஆதாயம் கிடைக்கும், எப்படி எளிதாக கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களின் மனத்தில் நிலையாக உள்ளது. கல்வி பயில்வதில் கூட பல கணக்குகள் போட்டு இந்த படிப்புடன் இந்த படிப்பை சேர்த்து படித்தால் சுலபமாக பொருள் ஈட்டலாம் என்று வகை பிரித்து படிக்கிறார்கள். அந்தளவிற்கு பொருளாதாரம் அதிகமாக தேவைப்படுகிறது. கையில் பணம், வங்கியில் பணம், தங்க, வைர நகைகள், சொந்த வீடு, நான்கு, இரண்டு சக்கர வண்டி என்று எல்லா வசதிகளும் அமைய வேண்டும் என்ற தணியாத தாகம், வேட்கை ஏற்படுகிறது. இதற்கு கிரக அனுகூலம் என்பது மிகவும் அவசியமும், முக்கியமுமாகும். இப்படி ஒருவருக்கு திடீர் ஏற்றம், பொன், பொருள், சொத்து சேர்க்கை ஏற்படுவதற்கு பலவகைகளில் யோகம் இருந்தாலும் கோச்சார சனிபெயர்ச்சி சஞ்சாரத்தின் மூலம் அனுபவபூர்வமாக மிகப்பெரும்பாலானவர்களுக்கு பலன்கள் கிடைத்துள்ளன. ஒருவர் பிறந்த ராசிக்கு 3, 6, 11 ஆகிய ஸ்தானங்களில் சனிபகவான் வந்து அமரும்போது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது நல்ல மாற்றங்கள் உண்டாகிறது.

குறிப்பாக சனி 6ல் இருக்கும்போது மிகப்பெரிய தனயோகத்தையும், பட்டம், பதவி, செல்வாக்கு, சொத்து சுகம் என்று மிகப்பெரிய சாம்ராஜ்ய யோகத்தை செய்து விடுகிறார். காரணம் 30 வருட கணக்கு என்பது சனி சஞ்சாரத்தை குறிப்பதாகும். 30 வருடங்கள் தொடர்ந்து உயர்ந்தவனும் இல்லை, 30 வருடங்கள் தொடர்ந்து தாழ்ந்தவனும் இல்லை என்று சொல்வார்கள். சனி ஒரு இடத்தை விட்டு பெயர்ச்சியானவுடன் மீண்டும் 30 வருடங்கள் கழித்துதான் அந்த ராசிக்குள் வரும் என்பதை வைத்து சொன்ன கணக்கு. இப்படி சனி 3, 6, 11ல் கோச்சாரத்தில் வரும்போது ஒருவருக்கு யோகமான தசாபுக்திகள் பலமாக நடந்து கொண்டிருந்தால் மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்கள். குறிப்பாக சனி தசை, ராகு தசை, சுக்கிர தசை மற்றும் அவரவர் சொந்த ஜாதக அமைப்பின்படி யோக தசைகள், விபரீத ராஜயோக அமைப்பு, நீச்ச பங்க ராஜயோக தசை நடைபெறும் காலத்தில் இந்த கோச்சார சனியின் பலமும் இணைவதால் இத்தகைய அமைப்பு உடையவர்கள் அகண்ட சாம்ராஜ்ய லட்சுமி யோகத்தை அனுபவிப்பார்கள்.

அனுபவ ஜோதிடம்

இந்த தலைப்பில் மிகப் பிரபலமாக உள்ளவர்களின் ஜாதக கிரக அமைப்புக்கள் எப்படி யோகத்தை தந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட யோக அமைப்புகள் நம் ஜாதகத்தில் இருந்தால் இது போன்ற குபேர யோக வாழ்க்கை நமக்கு அமையும் என்ற நம்பிக்கை ஏற்படும். உதாரண ஜாதகம் 1. இந்தியாவின் தொழில் சக்கரவர்த்தி ரத்தன் டாட்டா ஜாதகம் இந்தியா மட்டும் அல்லாது உலகமெங்கும் தன் தொழில்களை நடத்திக் கொண்டிருக்கும் ரத்தன் டாட்டாவின் ஜாதகத்தில் லக்னத்திலேயே மிகப் பிரபலமான யோகமான தர்மகர்மாதிபதி யோகம் அமைந்துள்ளது. அதாவது லக்னத்திற்கு 9, 10, 11க்குடைய சூரியன், புதன், சுக்கிரன் இணைந்துள்ளனர். 1, 2, 3, 4க்குடைய கிரகங்களான குரு, சனி பரிவர்த்தனை யோகம்.

இந்த ஜாதகத்தில் குறிப்பாக பத்தாம் இடம் என்ற தொழில், வியாபார ஸ்தானம் மிகவும் பலம் பெற்றுள்ளது. பத்தாம் அதிபதியாகிய புதன் லக்னத்திலேயே அமர்ந்து தசம தனலட்சுமி யோகத்தை தருகிறார். மேலும் பத்தாம் வீட்டை தன ஸ்தானாதிபதியான சனி பார்க்கிறார். தனுசு லக்னத்திற்கு பூர்வ புண்ணிய பஞ்சமாதிபதியான செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டையும், வியாபார ஸ்தானமான 10ம் வீட்டையும் பார்க்கிறார். மேலும் கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம், கிரகமாலிகா யோகம் என பல எண்ணிலடங்கா யோகங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக தொழில் ஸ்தானமான 10ம் இடம் அதீத பலம் பெற்றதால் உலகப்பெரும் தொழில் சக்கரவர்த்தியானார்.

உதாரண ஜாதகம் 2. இசை அமைப்பாளர் இளையராஜா திரைப்படத்துறையில் இசை அமைப்பாளராக புகழின் உச்சநிலையில் இருக்கும் இளையராஜா, பக்தி மார்க்கத்திலும் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். சுக்கிரனின் லக்னமான ரிஷபத்தில் பிறந்துள்ள இவருக்கு லக்னத்திலேயே நான்கு கிரகங்கள். லக்னாதிபதியாகிய சுக்கிரன் பாக்கியஸ்தானத்தையும், கேதுவையும் பார்ப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். கேதுவின் அருள் இல்லாமல் யாரும் இசைத்துறையில் புகழ்பெற முடியாது. ஜோதிட சாஸ்திரத்தில் கேதுவிற்கு இசைஞானி என்ற அடைமொழி உண்டு. அதற்கேற்றாற் போல் இளையராஜா, இசைஞானி என்று புகழப்படுகிறார். தர்மகர்மாதிபதியாகிய சனிபகவான் லக்னத்திலேயே அமர்ந்து தனது சொந்த வீடான கும்ப ராசியை பார்ப்பதால் தான் சார்ந்த துறையில் உச்சநிலையை அடைந்தார். ஞானம், அறிவு, வித்தைக்கு அதிபதியான வித்யாகாரன் புதன் லக்னத்தில் அமர்ந்ததால் வாக்கு வன்மை பெற்றார்.

மேலும் உச்சம் பெற்ற சந்திரனுடன், சூரியன் சேர்ந்து அமாவாசை யோகம் அமைந்ததால் பாடல், கவி புணையும் ஆற்றல் வந்தது. எண் கணித அமைப்பின்படி 27 என்ற பிறவி எண் கூட்டு எண் அமைந்ததாலும், அந்த எண்ணின் நாயகன் சந்திரன் உச்சம் பெற்றதாலும், 7ம் எண்ணின் நாயகன் பாக்கியஸ்தானத்தில் நின்றதாலும், குரு, கேது சம சப்தம பார்வை காரணமாக கோடீஸ்வர யோகம் அமைந்தது. இன்றும் பல நுட்பமான கிரக யோக அமைப்பு காரணமாக ஞானசூரியனாக பிரகாசிக்கிறார்.

உதாரண ஜாதகம் 3. திரைப்பட நடிகர் சூரியா திரைப்படத் துறையில் கதாநாயகனாகவும், அறக்கட்டை, தர்ம ஸ்தாபனங்கள் போன்றவற்றை சிறப்பாக செய்து வரும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரரான நடிகர் சூரியா சுக்கிரனின் லக்னமான ரிஷபத்தில் பிறந்துள்ள இவருக்கு லக்னாதிபதியாகிய சுக்கிரன் சதுர்த்த கேந்திரத்தில் இருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டை பார்ப்பது மிகப்பெரிய ராஜயோகமாகும். தர்மகர்மாதிபதியான சனியும், தனம், வாக்கு, பூர்வபுண்ணியாதிபதியான புதனும், இரண்டாம் இடத்தில் அமையப் பெற்றதால் இவர் சொல்வாக்கு, செல்வாக்கு பெற்றுள்ளார். சூரியன், சந்திரன் இருவரும் சம சப்தமமாக பார்வை செய்து பெளர்ணமி யோகத்தை கொடுக்கிறார்கள். சந்திரன் தன் சொந்த வீடான கடக ராசியை (மூன்றாம் இடம்) பார்ப்பதால் ஆடல், பாடல், கலைகளில் தேர்ச்சி ஏற்பட்டது. பூமிகாரகன் செவ்வாய் 12ம் இடத்தில் சொந்த வீட்டில் ஆட்சியாக 8ம் அதிபதியான குருவுடன் சேர்க்கை பெற்று, சந்திரனுக்கு சதுர்த்த கேந்திரத்தில் இருப்பது குருமங்கள யோகமாகும்.

மேலும் 3க்குடைய சந்திரன், எட்டுக்குடைய குரு, 12க்குடைய செவ்வாய் இந்த தொடர்பு ராஜயோக அம்சங்களில் ஒன்றாகும். இந்த ஜாதகத்தில் மிகப்பெரிய தசம தனலட்சுமி யோகம் சூட்சுமமாக  மறைமுகமாக அமைந்துள்ளது. அதாவது சனி வர்கோத்தமம், சந்திரன் வர்கோத்தமம், குரு வர்கோத்தமம், சுக்கிரன் வர்கோத்தமம். இப்படி நான்கு கிரகங்கள் வர்கோத்தமம். வர்கோத்தமம் என்றால் ராசிக் கட்டத்தில் ஒரு கிரகம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த கிரகம் நவாம்ச கட்டத்திலும் அதே இடத்தில் இருப்பதை வர்கோத்தமம் என்று சொல்கிறோம். இந்த வர்கோத்தம யோகம் தான் இந்த ஜாதகத்தின் மிகப்பெரிய அம்சம்.

உதாரண ஜாதகம் 4. உயர் உச்சத் தொழில் அதிபர் முகேஷ் அம்பாணி இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக மிக உச்சத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி ஜாதகத்தில் மிக நுட்பமான, சூட்சுமமான யோகங்கள், கிரக பலம், ஆதிக்க பலம் உள்ளது. குறிப்பாக இவர் பிறந்த தேதியின் அடிப்படையில் பிறந்த தேதி எண் 1. கூட்டு எண் 9 ஆக அமைகிறது. இந்த இரண்டு எண்களுமே புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, அதிகாரம், ஆளுமை, கம்பீரம், மிடுக்கு, ஆற்றல், செயல்திறன், துணிச்சல் ஆகியவற்றை தரக் கூடியதாகும். இந்த எண்ணின் நாயகன் சூரியன், 10ம் அதிபதியாக ஜாதகத்தில் உச்சம் பெற்றுள்ளார். செவ்வாய் லக்னாதிபதியாக சொந்த நட்சத்திரத்தில் இருந்து லக்னத்தை பார்க்கிறார். தனம், வாக்கு, பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி குரு பத்தாம் வீட்டில் இருந்து பத்தாம் அதிபதி சூரியனை பார்க்கிறார்.

சுக்கிரனும், செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதியாகிய சந்திரன் தனஸ்தானத்தில் இருந்து தனஸ்தானாதிபதி குருவால் பார்க்கப்படுகிறார். திட, தைரிய, வீரிய ஸ்தானாதிபதி, சுகாதிபதி சனி லக்னத்தில் இருந்து லக்னாதிபதி செவ்வாயால் பார்க்கப்படுகிறார். 3, 6, 8, 12க்குடையவர்கள் சேர்க்கை, பார்வை மூலம் தொடர்பு கொண்டதால் மிகப்பெரிய விபரீத ராஜயோகம் ஏற்பட்டது. மேலும் நவாம்சத்தில் சனி மகரத்தில் ஆட்சியாகவும், குரு தனுசில் ஆட்சியாகவும், சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் அமைந்தது மிகப் பெரிய யோகமாகும்.

குறிப்பு: 

இந்த உதாரண ஜாதகங்களில் உள்ள கிரக அமைப்புகள், பார்வை, சேர்க்கை, யோகம் போன்றவைகள் அந்த ஜாதகர்களுக்கு முழு யோக பலன்களை வாரி வழங்கியதால் இந்த அளவிற்கு உயர்ந்த நிலையை அடைந்தார்கள். இதைப் போன்ற யோக அமைப்புகள் ஒரு மூன்றோ, நான்கோ நமக்கு இருந்தால் நாமும் ஏதாவது ஒரு வகையில் வெற்றியாளராக உயர முடியும்.  நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் வழிகாட்டுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது தவறான அணுகுமுறையாகும். கிரகயோக பலம் என்பது என்ன என்பதை இந்த நான்கு ஜாதகம் மூலம் நாம் தெளிவாக அறியலாம்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

Related Stories: