திருப்பதி சென்றால் திருப்பம்!

எங்களது ஒரே மகன் 11ம் வகுப்பில் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டான். மிரட்டி பணம் வாங்கி நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். எவ்வளவோ பரிகாரம் செய்தும் பலன் இல்லை. ஒரே பையன் என்பதால் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். உரிய பரிகாரம் கூறவும். திலகவதி, கோயம்புத்தூர்.

Advertising
Advertising

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் நல்வாழ்வு உங்கள் கையில்தான் உள்ளது. அவரது ஜாதகத்தில் புதன், குரு, சனிஆகிய மூன்று கிரகங்கள் வக்ரம் பெற்றுள்ளது. அதிலும் ஏழாம் வீட்டில் இணைவு பெற்றுள்ள குருவும், சனியும் வக்ரம் பெற்றுள்ளது பலவீனமான நிலையே. குரு சண்டாள யோகம் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவார்கள். நல்லவர்போல் நடிக்கும் நண்பர்களால் இவரது வாழ்வு வீணாகி வருகிறது. நண்பர்களை முழுவதுமாக நம்பி விடாமல் பட்டும் படாமலும் இருந்து வர அறிவுறுத்துங்கள். நண்பர்களை தனது தொழில்முறை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவரது ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் என்பது வலிமை பெற்றுள்ளது. லக்னாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், தொழில் ஸ்தானாதிபதி சூரியன் லாப ஸ்தானமாகிய 11ல் அமர்ந்திருப்பதும் பலமான நிலையே. உங்கள் தொழிலான வணிக வியாபாரம் இவருக்கு சரியாக வராது. தொழில் முறையிலான சூரியன், செவ்வாயின் தொடர்பு அரசியல் ஈடுபாட்டினைத் தரும் .ஊர் சுற்றினாலும் பொதுச் சேவையில் ஈடுபடச் சொல்லுங்கள். பேரூர் பட்டீஸ்வரம் ஆலயத்திலுள்ள கோரக்கர் சந்நதிக்கு பின்புறம் அமைந்துள்ள பாலமுருகனுக்கு செவ்வாய்க் கிழமை தோறும் சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். மகனின் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

எனது பேத்தியின் ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் உள்ளதாக நினைக்கிறேன். குழந்தையின் பெற்றோர் ஒரு ஜோதிடரைஅணுகிய போது அவர் பரிகாரம் தேவையில்லை என்று சொல்லி விட்டாராம். வரும் வரன்களெல்லாம் தட்டிப் போகிறது. என் பேத்திக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மணிமாறன், திருநெல்வேலி.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிரதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் ராகுகேதுவிற்கு இடையில் இருந்து சந்திரன் வெளிவந்திருப்பதாக நீங்களே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த அமைப்பு காளசர்ப்ப தோஷத்தினைத் தராது. அதனால் உங்கள் ஜோதிடர் கூறியதுபோல் காளசர்ப்ப தோஷத்திற்கான பரிகாரம் தேவையில்லை. ஜென்ம லக்னத்தில் ஜீவன ஸ்தானாதிபதி சூரியனின் அமர்வு உங்கள் பேத்திக்கு கௌரவம் நிறைந்த வாழ்வினைப் பெற்றுத் தரும். லக்னாதிபதி செவ்வாயும், களத்ர ஸ்தானாதிபதி சுக்கிரனும் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே.

உடன் குடும்ப ஸ்தானாதிபதி குருவும் இணைந்திருப்பதால் நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் மருமகளாக செல்வதற்கான அம்சம் நிறைந்துள்ளது. குடும்பப் பொறுப்புகளை சுமக்கின்ற வகையில் மணவாழ்வு அமையும். செவ்வாயும், சுக்கிரனும் கேதுவின் அம்சத்தினைப் பெற்றிருப்பதால் மனதிற்குப் பிடித்த வரனாக அமைவதில் தடை உண்டாகி வருகிறது. ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்திற்கு பேத்தியை அழைத்துச் சென்று செந்தாமரை மலர்களாலான மாலையைச் சாத்தி பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். 2019ம் ஆண்டில் உங்கள் பேத்தியின் திருமணம் நல்லபடியாக நடந்தேறும்.

ஏற்கெனவே இரண்டு முறை மருந்துக் கடை வைத்து மூடிவிட்டேன். குழந்தையுடன் பிரிந்து சென்ற என் மனைவி ஏழு வருடம் கழித்து மீண்டும் வந்து சேர்ந்தாள். தற்போது 2வது குழந்தை பிறந்திருக்கிறது. வேலைக்கும் தொடர்ந்து செல்ல இயலவில்லை. குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். என்ன தொழில் செய்யலாம். வழி சொல்லுங்கள். மனோகரன்.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின் படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் சுக்கிரனின் அமர்வினைப் பெற்றிருக்கும் நீங்கள் சுகமாக ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் செய்ய நினைக்கிறீர்கள். ஆனால், உங்கள் ஜென்ம லக்னாதிபதி சூரியன் 12ல் அமர்ந்திருப்பது கடுமையான அலைச்சலைத் தரும். ஒரே இடத்தில் அமர்ந்து உங்களால் தொழில் செய்ய இயலாது. பத்தாம் இடத்தில் சூரியனின் சாரம் பெற்ற கேதுவும் இதனை உறுதி செய்கிறார். மருந்துத் தொழில் கைகொடுத்தாலும் மருந்துக்கடை வைக்க இயலாது. மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ் ஆக பணிபுரிய முயற்சியுங்கள். குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்களுக்கு நீங்களே காரணம்.

மனைவியைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி 11ல் அமர்ந்திருப்பது நல்லநிலையே. நல்ல மனைவி மற்றும் குழந்தைகளை அடைந்திருக்கிறீர்கள். அடுத்தவர்களிடம் குறை காணாது உங்களை நீங்கள் உணர்ந்து செயல்படுங்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம் உங்கள் உத்யோகத்திற்கு துணை நிற்கும். எத்தனைதூரம் அலைகிறீர்களோ, அந்த அளவிற்கு நன்றாக சம்பாதிக்க இயலும். ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும்.

மனநிலை பாதிப்பிற்காக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததன் விளைவாக என் கணவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. மாற்றுச் சிறுநீரகம்தான் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவரது மனம் தெளிவாகவும், அறுவைசிகிச்சை முடிந்து அவரது உடல் பாதிப்பு சரியாகவும் நல்லவழியைச் சொல்லுங்கள். ஒரு வாசகி, திருநெல்வேலி.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தசாநாதன் ராகு நீசம் பெற்றதோடு, தற்போது நடந்து வரும் புக்திக்கு அதிபதியான புதனும் நீசம் பெற்று 12ல் அமர்ந்துள்ளார். புத்திகாரகன் புதன் 12ல் நீசம் பெற்றிருப்பதால் மனத்தெளிவு என்பது தற்போது உண்டாவது சற்று சிரமமே. என்றாலும் லக்னாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்திருப்பதாலும், குரு பகவான் ஒன்பதில் ஆட்சி பலம் பெறுவதாலும் மனைவியாகிய உங்களால் அவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும்.

எவர் பேச்சையும் கேளாத உங்கள்கணவர் உங்கள் வார்த்தைக்கு செவிமடுப்பார். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக வலிமையின்படி நீங்கள் உங்கள் கணவரை அன்பினால் கட்டுப்படுத்த இயலும். அவருடைய மனநிலையை முழுமையாக உணர்ந்திருக்கும் நீங்கள் அவருடைய போக்கிலேயே சென்று அவருக்குப் புரிய வையுங்கள். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை நாட்களில் விரதம் இருந்து வீட்டில் நரசிம்மர் படம் வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள். உங்கள் கணவருக்கும் இந்த ஸ்லோகத்தினை கற்றுத் தந்து தினமும் 18 முறை சொல்ல வையுங்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதோடு அவருடைய உடல்நிலையும் ஆரோக்கியம் பெறும்.

“ஸ்மரணாத் ஸ்ரீவபாபக்நம் கத்ரூஜவிஷநாசநம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.”

காது கேட்காத, வாய்பேச முடியாத பெண்ணை திருமணம் செய்துள்ளேன். திருமணமான நாள் முதலாக எந்நேரமும் தாயார் வீட்டிலேயே இருக்கிறார். பிறந்த குழந்தையை, என்னிடமும் என் பெற்றோரிடமும் ஒட்ட விடுவதில்லை. என் தாய்க்கு கைகால் செயல்படவில்லை. தந்தைதான் சமையல் வேலை செய்கிறார். என் மனைவி என் தாய், தந்தையரை கவனிப்பதில்லை. என் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். மணிவண்ணன், கரூர்.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதாகவும், திருமணத்திற்கு பொருத்தம் ஏதும் பார்க்காமல் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். நடந்து முடிந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பது என்பது புத்திசாலித்தனம் ஆகாது. திருமணம் என்பது ஜோதிடர் பொருத்தம் சொல்வதால் மட்டும் நடந்து விடாது. திருமண பந்தம் என்பது இறைவன் போட்ட முடிச்சு. அதை மாற்ற யாராலும் இயலாது. காது கேட்காமல் வாய் பேச முடியாத பெண்ணை திருமணம் செய்திருக்கிறீர்கள். இதனை தியாக உள்ளத்தோடுதான் செய்ய வேண்டுமே தவிர, பிரதிபலன் எதிர்பார்த்து செய்வது தவறு.

பொதுவாக மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் மீது பரிதாபப்படுவதை விரும்ப மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு கௌரவத்தை எதிர்பார்ப்பார்கள். நீங்கள் அவருக்குரிய கௌரவத்தோடு மரியாதையாக நடத்திப் பாருங்கள். உங்களுக்காக உயிரையும் தருவார். எப்போதும் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருந்தால் அவரை மாற்றுவது கடினம். உங்கள் மனைவி மற்றும் குழந்தையோடு திருமலை திருப்பதிக்குச் சென்று முடி காணிக்கை செலுத்தி வருடந்தோறும் தவறாமல் வந்து தரிசிப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருப்பதி சென்று வந்தவுடன் திருப்பத்தினைக் காண்பீர்கள். வாழ்வில் வசந்தம் மலரும்.

வெளிநாட்டில் வேலை பார்த்த என் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி கோமா நிலைக்குச் சென்று ஒருவழியாக காப்பாற்றினோம். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் நின்றதால் எல்லாம் மறந்து ஐந்து வயது சிறுவன் போல் ஆனவனை ஒரு வருடம் பயிற்சி அளித்து இந்தியா அழைத்து வந்தோம். இதற்குள் அவனுடைய வேலைபோய் விவாகரத்தாகி கோபுரத்தில் இருந்த அவன் வாழ்வு திடீரென குப்பைமேடு ஆகிவிட்டது. அவனது எதிர்காலத்திற்கு என்ன வழி என்பது புரியாமல் தவிக்கிறோம். சாவித்திரி, திருச்சி.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதியான சூரியனின் தசை முடிவினில் நடந்த சம்பவம் அவரது வாழ்வினைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் காணப்படும் ராகுசந்திரன் இணைவும், சனி  கேதுவின் இணைவும் அத்தனை சிலாக்கியமில்லை. மேலும், ஜென்ம லக்னாதிபதி சூரியன் ஏழில் சனியின் வீட்டில் அமர்ந்திருப்பது காலம் முழுவதும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்க வைக்கும். அவரால் இனிமேல் தனித்துச் செயல்பட இயலாது. தற்போது நடந்து வரும் செவ்வாய் தசையின் காலம் என்பது அவரது உடல் ஆரோக்யத்தை சீராக வைத்திருக்கும்.

50வது வயது முதல் துவங்கும் ராகு தசையில் உங்களாலும் மற்றுமுள்ள குடும்பத்தாராலும் மருத்துவரின் உதவியின்றி அவரை சமாளிக்க இயலாத நிலை உருவாகக் கூடும். மனதை திடப்படுத்திக் கொண்டு தற்போதே ஏதேனும் ஹோம் போன்றவற்றில் சேர்த்து விடுவதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். அவரது உடலும் மனமும் வலிமையைப் பெற பிரார்த்தனை செய்வோம்.

சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா, டிராமா பித்து. அவ்வப்போது நாடகங்கள் எழுதி ஒத்திகை பார்ப்பதோடு சரி, மேடையேற்ற என்னிடம் பணம் இருந்ததில்லை. என்னிடம் இருந்து ஸ்கிரிப்ட் எழுதி வாங்கிச் சென்ற ஒருவன் தனது பெயரில் அதனை அரங்கேற்றம் செய்து துரோகம் இழைத்தான். தற்போது கூட ட்ரெண்ட் செட்டராக ஒரு திரைக்கதை வசனம் எழுதி முடித்திருக்கிறேன். இண்டஸ்ட்ரியில் யாரையும் தெரியாததால் அது என் மேஜையின் மேல் தூங்குகிறது. இந்த 84வது வயதிலாவது என் எழுத்து மக்களை சென்றடையுமா? லோகநாதன், எழும்பூர்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. 84 வயதிலும் விடாமுயற்சியோடு செயல்பட்டு வரும் உங்களை அவசியம் பாராட்டியே தீர வேண்டும். இருந்தாலும் குடத்திலிட்ட விளக்காக உங்கள் படைப்புகளை ஏன் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. முயற்சித்தால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. சினிமா, சின்னத்திரை போன்ற மீடியாவில் புகழ்பெற சுக்கிரனின் ஆதரவு தேவை. நீங்கள் சுக்கிரனின் நட்சத்திரமான பரணியில் பிறந்திருக்கிறீர்கள்.

என்றாலும் லக்னத்திற்கும், ராசிக்கும் அதிபதியாகிய செவ்வாய் நீசம் அடைந்து கேதுவுடன் இணைந்திருப்பதால் தயக்க குணத்தைக் கொண்டிருக்கிறீர்கள். போதாக்குறைக்கு ஜீவன ஸ்தானத்தில் உள்ள சனியும் உங்கள் வளர்ச்சியை தடை செய்திருக்கிறார். இருந்த போதிலும் எழுத்து வன்மையைத் தரும் புதனின் தசை தற்போது துவங்கியுள்ளதால் இந்த வயதிலும் உங்களால் சாதிக்க இயலும். தயக்கத்தினை விடுத்து பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உங்கள் படைப்பினை எடுத்துச் செல்லுங்கள். விடாமுயற்சியே வெற்றிக்கான வழி. புதன் தோறும் பெருமாளை வழிபட்டு வாருங்கள். ஜாதக பலத்தின்படி 06.09.2019 முதல் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கக் காண்பீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: