இரண்டே நாட்களில் தேர்வான ரியா சுமன்

சென்னை: செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்துள்ள படம், ‘ஹிட்லர்’. விஜய் ஆண்டனி, கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ‘ஆடுகளம்’ நரேன், இயக்குனர் தமிழ் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, தனா இயக்கியுள்ளார். ‘சீறு’, ‘மன்மத லீலை’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ போன்ற படங்களில் நடித்த ரியா சுமன் ஹீரோயினாக நடித்துள்ளார். படம் குறித்து தனா கூறுகையில், ‘எல்லோருடைய மனதிற்குள்ளும் ஒரு சர்வாதிகாரி மறைந்திருக்கிறார்.

அவர் எப்போது வெளிப்படுவார் என்று தெரியாது. சமூகத்திலும் ஜனநாயகம் என்ற முகமூடி அணிந்துகொண்டு சர்வாதிகாரம் நடக்கிறது. இதை எதிர்த்துப் போராடும் ஒரு சாமானியனின் கதை இது. அதனால்தான் ‘ஹிட்லர்’ என்று பெயரிட்டுள்ளோம். முதலில் ஒரு முன்னணி நடிகை சில காட்சிகளில் நடித்தார். திடீரென்று சொந்த காரணங்களுக்காக விலகினார். உடனே படப்பிடிப்பு நடக்காவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே, யாரை கேட்டால் உடனே நடிப்பார் என்று விசாரித்தபோது, அனைவரும் ரியா சுமன் பெயரை சிபாரிசு செய்தனர்.

அவரிடம் கதை சொன்னபோது, மறுப்பு சொல்லாமல் இரண்டே நாட்களில் படபிடிப்புக்கு வந்தார்’ என்றார். ரியா சுமன் கூறும்போது, ‘படத்தின் இயக்குனர் மணிரத்னத்திடம் பயிற்சி பெற்றவர். விஜய் ஆண்டனி நல்ல படங்களில் மட்டுமே நடிப்பவர். கதையும், கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். கொரோனா காலத்தில் சிறிய இடைவெளி ஏற்பட்டது. இப்போது தெலுங்கில் பிசியாக நடிக்கிறேன். ‘ஹிட்லர்’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன்’ என்றார்.

The post இரண்டே நாட்களில் தேர்வான ரியா சுமன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: