கல்லூரி பேருந்தில் திடீர் தீ 35 மாணவர்கள் தப்பினர்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை சென்னையை சேர்ந்த எபினேஷ்(27) என்ற டிரைவர் ஓட்டினார். தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.  இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடுமாறு எச்சரித்தார்.  இதையடுத்து பேருந்தில் இருந்த மாணவர்கள் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.  தகவலறிந்த பூந்தமல்லி, மதுரவாயல், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்தின் உள் பகுதிகள் அனைத்தும் எரிந்து, பேருந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. உரிய நேரத்தில் பேருந்தை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தி பார்த்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post கல்லூரி பேருந்தில் திடீர் தீ 35 மாணவர்கள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: