கீழவைப்பார் மீன் ஏலக்கூடத்திற்கு வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பு

குளத்தூர் : விசைப்படகுகளுக்கு தடை காலம் எதிரொலியாக கீழவைப்பார் ஏலக்கூடத்திற்கு வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. மீன்கள்  இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்.15 முதல் ஜூன் 15 வரை  விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு  தடை விதித்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் முதல் விசைப்படகுகள் கடலுக்குள்  மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து  வருகின்றனர். குளத்தூரையடுத்த சிப்பிகுளம், கீழவைப்பாரில் 250க்கும்  மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடல் தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில  மாதங்களாகவே மீன்பாடுகள் மந்தமாகவே இருந்த நிலையில் விசைப்படகுகள் தடை காலம்,  காற்று வேகம் குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மீன்பாடு   அதிகரித்து காணப்படுகிறது. இதில் சாலை, ஊளி, விலமீன், நகரை, சுண்டாங்கிளி,  அயல போன்ற மீன்கள் வரத்திருந்தது. கடந்த வாரங்களில் ஏலம் போனதைவிட மீன்களின் விலை நேற்று சற்று  அதிகரித்தது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.170க்கு விற்ற ஊளி மீன்  தற்போது ரூ.300ல் இருந்து ரூ.400வரை ஏலம் போனது. முறல்வகை மீன்கள் ரூ.350 வரை ஏலம்  போனது. அயல, சுண்டாங்கிளி ரூ.130க்கு விற்பனையானது.இதுகுறித்து  சில்லறை மீன் வியாபாரிகள் கூறியதாவது: குளத்தூர் சுற்றுவட்டார பகுதியில்  மீன்கள் விற்கும் சில்லரை வியாபாரிகள் சிப்பிகுளம், கீழவைப்பார்  ஏலக்கூடத்தில் மீன்களை ஏலத்தில் எடுத்து இப்பகுதி கிராமங்களில்  விற்பனைக்கு எடுத்துச் செல்வோம். கடந்த சில வாரங்களாக மீன்பாடுகள்  குறைவாகத்தான் இருந்து வருகிறது. இதனால் மீன்கள் விலை அதிகரித்து  காணப்பட்டது. தற்போது விசைப்படகுகளுக்கு தடை காலம் என்பதால் தருவைகுளம்,  தூத்துக்குடி போன்ற பெரிய ஏலக்கூடத்திற்கு செல்லும் வெளியூர் வியாபாரிகள்  மீன்களுக்காக தற்போது சிப்பிகுளம், கீழவைப்பாருக்கு வரத்துவங்கி உள்ளனர்.  இதனால் மீன்களை ஏலத்தில் எடுப்பதற்கு வியாபாரிகளிடையே கடும் போட்டி உள்ளது. இந்த போட்டியால் மீன்களை அதிக விலைக்கு எடுக்க வேண்டிய  சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த விலைக்கு வாங்கிச் சென்று பொதுமக்களிடையே விற்பது  குதிரைக்கொம்பாக உள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.300க்கு விற்ற ஊளி, முறல் வகை  மீன்கள் தற்போது ரூ.500க்கு மேல் விற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும்  வரும் நாட்களில் மீன்பாடுகளின் வரத்தை பொருத்தே மீன்களின் விலையில் மாற்றம் ஏற்படும், என்றனர்….

The post கீழவைப்பார் மீன் ஏலக்கூடத்திற்கு வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: