மருத்துவ கல்லூரி கட்டுமான பணி சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு நேரில் ஆய்வு

ஊட்டி : தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு அதன் தலைவர் டிஆர்பி., ராஜா தலைமையில் குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், ராமசந்திரன், எழிலரசன், பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், செல்லூர் ராஜூ, ஈஆர்., ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நீலகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தமிழகத்தில் முதல் முறையாக சோதனை முயற்சியாக மண் அரிப்பை தடுக்கவும், நிலச்சரிவை கட்டுபடுத்திடவும் சுற்றுசூழலுக்கு இணக்கமான செலவு குறைந்த புதிய வழிமுறைகள் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் ைஹட்ரோ சீடிங் முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை இக்குழுவினர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஊட்டி – தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையில் கட்டப்பட்ட சிறு பாலம் மற்றும் சாலை பணிகளை பார்வையிட்ட பின் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்ற குழுவினர் அங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் இயற்கை காட்சிகளை பார்வையிட்டனர்.மதிப்பீட்டு குழுவினர் தலைவர் டிஆர்பி., ராஜா,  சுற்றுலா பயணிகளிடம் அடிப்படை வசதிகள், தொட்டபெட்டாவில் ஏதேனும் புதிய வசதிகள் ஏற்படுத்துவது போன்ற கருத்துகளை கேட்டறிந்தார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டு கொண்டார். பின்னர் பன்சிட்டி பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையின் கேரட் கழுவும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஊட்டி எச்பிஎப்., பகுதியில் ரூ.461.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஊட்டி – கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணித்த இக்குழுவினர், இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க 36வது கொண்டை ஊசி வளைவில் சேப்டி ரோலர் கிரஸ் பேரியர் எனப்படும் சுழலும் ரப்பர் தடுப்பான் பொருத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். கட்டுபாட்டை இழந்து ஏதேனும் வாகனங்கள் இதன் மீது மோதினால் உருளைகள் மீது மோதி வாகனம் சாலை பக்கமே திரும்பி செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்விற்கு பின் மதிப்பீட்டு குழு தலைவர் டிஆர்பி., ராஜா கூறுகையில், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். இன்று (நேற்று) முழுவதும் ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்த பின், தமிழகம் ஆய்வு மாளிகையில் நாளை (இன்று) ஆய்வு கூட்டம் நடக்கிறது, என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….

The post மருத்துவ கல்லூரி கட்டுமான பணி சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: