நகைக்கடன் தள்ளுபடியை போல சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி ரசீது ஓரிரு நாளில் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி போல, சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி ரசீது ஓரிரு நாளில் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, 110 விதிகளின்படி கூட்டுறவு சங்க வங்கிகளில்  நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகளும், நகைகளும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் நடந்தது.கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 69 வங்கிகளில் நகை கடை பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுமார் ₹30 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி ரசீதுகள் மற்றும் நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் ₹4,800 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது விரைவில் 100% வழங்கப்படும். மேலும் தகுதியுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து நகை கடன் தள்ளுபடி ரசீது பெற்றுக் கொள்ளலாம். தற்போது மத்திய சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கடன் பெற்ற ₹30 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு தள்ளுபடி ரசீதும், நகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி குறித்து தற்போது விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் நகை கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டது போல சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் கோரிக்கைநகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் தன்னுடைய துறைமுகம் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளதால் அந்த மண்டபத்தை அழகுபடுத்த வேண்டும். இதற்காக பேசி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான சிறந்த மண்டபமாக மாற்ற வேண்டும் என கூட்டுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் வங்கிகள் சார்பாக ஆண்டுதோறும் நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். அதேபோல் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆன நிலையில் இந்த கூட்டுறவு வங்கிகள் மூலமாக நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரங்கத்தை நல்ல அரங்கமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான பணிகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். ஆனால் இந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என ரிசர்வ் வங்கி விதிகள் உள்ளது. இருந்தாலும் கூட்டுறவு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் அரங்கை நவீனமயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்….

The post நகைக்கடன் தள்ளுபடியை போல சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி ரசீது ஓரிரு நாளில் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: