உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மாயமான இலை நிர்வாகியை தேடும் கட்சி தொண்டர்களின் சோக கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தலுக்கு முன்பாக கெத்து காட்டிய இலை நிர்வாகி… தலையில் முக்காடு போட்டபடி நடமாடுகிறாராமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘முட்டைக்கு பேமசான மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகள் இருக்கு. இதில் மாவட்டத்தின் பெயரைக் கொண்ட நகராட்சியில்  நகர்ப்புற உள்ளாட்சி எலக்‌ஷனுக்கு முன்னாடி இலைக்கட்சி நிர்வாகி ஒருத்தரு ஆடிய ஆட்டத்திற்கும், அடித்த ஜம்பத்திற்கும் அளவே இல்லையாம். அதிலும்  குறிப்பாக முதல் ஒண்ணு, ரெண்டு, மூணு என்று 3 வார்டுகளிலும் நாம தான் ஜெயிப்போம். எதிர்த்து நிக்குற ஒருத்தருக்கும் டெபாசிட் கூட தேறாது. அப்படி  நடக்கவில்லை என்றால் மொட்டை அடிச்சு.. மீசையை.. எடுத்துக்கிறேன் என்று அந்த நிர்வாகி ஏகத்துக்கும் எகிறிக் குதிச்சாராம். இடையில் எதிர்களத்தில் இருந்த  நிர்வாகிகளை பார்த்து ஏளன சிரிப்பு வேற அடிக்கடி வருமாம். ஆனால் எலக்‌ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம், அந்த பார்ட்டியை வார்டு பக்கம் மட்டும் இல்லை… மாவட்டத்திலேயே பார்க்க முடியலையாம். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியலையாம். இதனால, பாதிக்கப்பட்ட தொண்டர்கள், தோற்றுபோன வேட்பாளர்கள் இலை கட்சி நிர்வாகியை சல்லடை  போடாத குறையாக சொந்த கட்சிக்காரங்களே தேடிக்கிட்டு இருக்காங்க. அலம்பல்  பார்ட்டி கொக்கரிச்ச 3 வார்டுலயும் இலைகட்சி மண்ணை கவ்வியதுதான், அவரு  மாயமானதற்கு காரணமாம். இருந்தாலும் நைட்டுல ஏதாவது ஒரு இடத்துல ரவுண்ட்ஸ் வந்து போறாராம். அதுவும் தலையில் முக்காடு போட்டபடி போகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கருப்பு காக்கிகளை களையெடுத்ததால் குமரி சுத்தமாகும் என்று யார் சொல்றாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்தில் மீண்டும் மசாஜ் சென்டர்கள் பெயரில் பலான விஷயம் தலை தூக்கி இருக்கிறதாம். இரண்டு, மூன்று தடவை தனிப்படை போலீசார் இந்த மசாஜ் சென்டர்களை குறி வைத்து சோதனை செய்தும் ஏமாற்றத்துடன் தான் திரும்பினாங்க. சோதனைக்கு செல்லும் தகவல் முன்கூட்டியே கசிந்து விடுவதால், மசாஜ் சென்டர்  மாபியாக்கள் உஷாராகி விடுகிறார்கள். இந்த தகவலை கசிய விடுவதே குமரி மாவட்ட காவல்துறையில் முக்கிய இடத்தில் இருக்கும் அதிகாரிகள் சிலர் தான் என்கிறார்கள். குமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியில் உள்ள இந்த அதிகாரிகள், மசாஜ் மாபியாக்களுடன் அதிக நெருக்கமாக உள்ளனர். சமூக வலை தளங்களில் படங்களை பதிவிடும் அளவுக்கு இவர்கள் நெருக்கமாம். மசாஜ் சென்டர்களில் சோதனைக்கு தனிப்படை தயாராகிறது என்பதை மோப்பம் பிடித்து  உஷாராக்கி விடுகிறார்களாம். இதனால் தான் இந்த மசாஜ் மாபியாக்கள் போலீசிடம் சிக்காமல் உள்ளார்களாம். எதையோ, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்  மாவட்ட காவல் உயர் அதிகாரி, முதலில் காவல்துறையில் உள்ள இந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து கழட்டிவிட்டால் தான் மாவட்டம் சீராகும் என காவல்துறை நண்பர்கள் வருத்தத்துடன் பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நாம்கோ கூட்டுறவு நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகளை தனியாக ஒரு பெண்ணே செய்யறாங்களாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வடசென்னையில் செயல்படும் நாம்கோ கூட்டுறவு நிறுவனம் மூலம் சுமார் 200 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு பண்டக சாலையில் கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அமைச்சர் பரிந்துரையின் பேரில் பெண் உயர் அதிகாரி ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் தலைமையகத்தில் உதவியாளராக உள்ள இலை கட்சி தொழிற்சங்கத்தை சார்ந்த 4 பணியாளர்களை மட்டுமே உடன் வைத்துக்கொண்டு பணியாளர் விரோத போக்கினை தொடர்ந்து கையாண்டு வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, கடந்த 2013ம் ஆண்டு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்குகூட இன்னும் முறையாக இஎஸ்ஐ பணம் பிடித்தம் செய்யவில்லையாம். இதுபற்றி தொழிலாளர்கள் கேட்டால், பெண் அதிகாரி அந்த தொழிலாளர்களை மிரட்டும் தொணியில் பேசுகிறாராம். அவரால் பயன் அடைந்துவரும் நாலு இலை கட்சி தொழிற்சங்கத்தினரும் அதிகாரிக்கு துணை போவதால் ஊழியர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உயர் அதிகாரியின் வீட்டுக்காரர்தான், 200 ரேஷன் கடைகளுக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யும் பணியை கவனித்துக் கொள்கிறார். இதன்மூலம் மாதம் பல லட்சம் கமிஷன் கிடைக்கிறதாம். இதுதவிர, பணியாளர்களின் இடமாறுதலுக்கு என்று தனி தொகை வசூலிக்கப்படுகிறதாம். அதிமுக ஆதரவாளராகவே இன்னும் தொடரும் இந்த அதிகாரியால், நாம்கோ கூட்டுறவு நிறுவனத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் பாதிக்கப்படுவதுடன், கூட்டுறவு நிறுவனத்துக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் துறை அமைச்சர்கள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பினாமியாக செயல்பட்டு கலக்கிய அதிகாரிகள்… இன்று கலங்கி போய் இருக்காங்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவையில் கடந்த வாரம் மாஜி அமைச்சர் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 59 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் கூடுதல் எஸ்பி அனிதாவும் தப்பவில்லை. கோவை பீளமேட்டில் உள்ள இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இவரைப்போலவே, கோவை நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன், அன்னூரில் வசிக்கும் நிலஅபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா ஆகியோரது வீடுகளிலும் அதிரடி ரெய்டு நடந்தது. இவர்கள், மூவரும் கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, பெரிய அளவில் பயனடைந்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல், பெரிய சொகுசு பங்களா கட்டியுள்ளனர். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தபோது, இலைக்கட்சியினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும், இலைக்கட்சியினர் சொத்து குவிக்கவும் இவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இது, விஜிலென்ஸ் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர்களது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விஜிலென்ஸ் பிடி இறுகியுள்ளதால், அடுத்தக்கட்டமாக என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் இந்த 3 காக்கி ஆபீசர்களும் தவிக்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மாயமான இலை நிர்வாகியை தேடும் கட்சி தொண்டர்களின் சோக கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: