தமிழ் மண்ணின் கலை பண்பாட்டை நினைவூட்டும் வகையில் தீவுத்திடலில் நாளை ‘நம்ம ஊரு திருவிழா’: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தமிழ் மண்ணின் கலை பண்பாட்டு வேர்களை தமிழர்களுக்கு நினைவூட்டும் வகையில்  சென்னை தீவுத்திடலில் நாளை ‘நம்ம ஊரு திருவிழா’ கலைநிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து, தலைமை செயலகத்தில் நேற்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  கலை பண்பாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து திங்கள்கிழமை, 21ம் தேதி மாலை 6 மணியளவில் நம்ம ஊரு திருவிழா என்கின்ற மாபெரும் கலை நிகழ்வை முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் தீவுத்திடலில் நடத்த உள்ளது.இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள். டிரம்ஸ் சிவமணி இதில் கலந்துகொண்டு ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்கிறார். சென்னையில் எல்இடி மூலம் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 75வது சுதந்திர திருநாளை முன்னிட்டு கொண்டாட்டங்களின் வடிவமாக 75 ஒளிப்படங்கள் நாட்டுப்புற கலைகளை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் திரையிடப்பட உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளார்கள். சென்னைஅரசு இசைக்கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கும். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதில், பலவிதமான நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அணிவகுக்கும். நம்ம ஊரு திருவிழாவின் நடன நிகழ்ச்சிகளைப் பிரபல நடன இயக்குநர்  பிருந்தா வடிவமைத்துள்ளார்.கலைநயமிக்க நடன நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களைக் கவரும் கானா பாலா குழுவினரின் கானா பாட்டு, வேல்முருகனின்  தெம்மாங்கு பாட்டு, திருவண்ணாமலை ஜெயக்குமார் குழுவினரின் ஒப்பாரிப் பாட்டு,  தஞ்சாவூர்  சின்னப் பொண்ணு குமார் குழுவினர், கிடாக்குழி மாரியம்மா குழுவினர் மற்றும் அந்தோணிதாசனின் கிராமியப் பாடல்கள்,  நாகூர் அப்துல் கனி குழுவினரின் பக்கிரிஷா பாட்டு போன்ற நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 400க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நிகழ்த்தப்பெறும் பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் இனிய இணைப்பாக இது அமையும்.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்தார்.நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை சென்னை  தீவுத்திடலில் நாளை மாலை 6 மணியளவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்….

The post தமிழ் மண்ணின் கலை பண்பாட்டை நினைவூட்டும் வகையில் தீவுத்திடலில் நாளை ‘நம்ம ஊரு திருவிழா’: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: