ரேலா இன்ஸ்டிடியூட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புற்றுநோய் மையம் திறப்பு புற்றுநோயை தாமதமாக கண்டறிந்தால் உடல்நிலை மோசமாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : குரோம்பேட்டை ரேலா இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோய் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியாமல், தாமதமாக கண்டறிந்தால் உடல்நிலை மோசமாகும். எனவே, பொதுமக்கள் பிரச்னை என்று தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, குரோம்பேட்டையில். ரேலா நிறுவன புற்றுநோய் மையத்தில் இந்தியாவின் முழுமையான, அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் அமைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். டாக்டர் ரேலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய சிகிச்சை மையம் அதிநவீன ரேடியேஷன் ஆன்காலஜி, ரோபாட்டிக் ஆன்காலஜி, அறுவைசிகிச்சை வசதி போன்றவற்றின் மூலம் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனித்துவமானதாகத் திகழும்.புதிய ஆர்.ஐ.சி.சி. மையத்தைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள சென்னையில், புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றொரு சிறப்பு அடையாளமாக திகழும். இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சர்வதேச, உள்நாட்டு நோயாளிகளில் 40 சதவீதத்துக்கு மேம்பட்டோர் சென்னைக்கு வருகிறார்கள். நாட்டில் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அது மட்டுமல்லாமல் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுவது உடல் நலப் பிரச்னையை மேலும் மோசமாக்குகிறது. தற்போதுள்ள நிலையில், மொத்த புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கே முதல், இரண்டாம் நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. அதற்குப் பிந்தைய நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிப்பது கடினம், சிக்கலானதும்கூட இதன் காரணமாக முதல், இரண்டாம் நிலைகளிலேயே மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோயாளிகளைக் கண்டறிய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்மூலம் சிகிச்சை வசதிகள் மேம்படும் என்று நம்புகிறோம். மாநிலம் முழுவதும் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு அரசின் முன்னேற்ற நோக்கத்துக்கு உதவும் வகையில் ஆர்.ஐ.சி.சி. மையம் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.டாக்டர் ரேலா நிறுவன மருத்துவ மையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், ‘சென்னையில் கிடைத்துவரும் புற்றுநோய் சிகிச்சையில் தேவைப்படும் மாற்றத்தை இந்த புற்றுநோய் மையம் நிகழ்த்தும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நோக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் ஆர்.ஐ.சி.சி. ஏற்கெனவே செயல்பட்டுவருகிறது. தொடர்ந்து அதே வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவோம்’ என்றார். ஆர்.ஐ.சி.சி.யை திறந்து வைத்த பின், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், ஜே.ஆர்.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post ரேலா இன்ஸ்டிடியூட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புற்றுநோய் மையம் திறப்பு புற்றுநோயை தாமதமாக கண்டறிந்தால் உடல்நிலை மோசமாகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: