ஒன்றிய அரசின் நிலுவையை பெற நடவடிக்கை வணிகவரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள வணிகவரி பணியாளர் பயிற்சி நிலைய அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துறைவாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஆணையர் பணீந்திர ரெட்டி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பின் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:  2017க்கு பின் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் வரிவசூலாக ரூ.93 ஆயிரம் கோடி வருவாய் எட்டப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியில் ரூ.1 லட்சத்து 5ஆயிரம்கோடியாக வரிவசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.12,400 கோடி பதிவுத்துறையில் வருவாய் எட்டப்பட்டுள்ளது. அது இம்மாத இறுதியில் ரூ.13,500 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆகிய இரண்டு துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் எட்டப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் போக்குவரத்திற்க்கு ஏற்ப பல்வேறு தாலுகாக்களில் பதிவு செய்யப்பட்ட பட்டாக்கள் ஒரே இடத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு, தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டிக்கான நிலுவை தொகை ரூ.15,000 கோடியாக உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு ஜிஎஸ்டிக்காண நிலுவைத் தொகையை முழுமையாக பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post ஒன்றிய அரசின் நிலுவையை பெற நடவடிக்கை வணிகவரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: