ஜெய்ப்பூர் செல்ல இருந்த தொழிலதிபர் பையில் இருந்து 2 துப்பாக்கி குண்டு பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்ல இருந்த தொழிலதிபரின் பையில் இருந்து 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குண்டுகளை பறிமுதல் செய்து தொழிலதிபரை போலீசில் ஒப்படைத்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு ஜெய்ப்பூருக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சுனில் சொல்லாகி (39) என்பவரது கைப்பையை ஸ்கேன் செய்தபோது எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை திறந்து பார்த்தனர். வெடிக்கும் நிலையில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவைகள் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 7.55 எம்எம் ரக குண்டுகள். அவற்றை பறிமுதல் செய்து தொழிலதிபரிடம் விசாரித்தனர். அப்போது அவர், ‘டெல்லியில் இருந்து 4ம் தேதி திருப்பதிக்கு சென்றேன். தற்போது ஜெய்ப்பூர் செல்வதற்காக வந்திருக்கிறேன். என்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் ஆவணங்களும் உள்ளது. எனது பாதுகாவலர் கைப்பையை அவசரமாக எடுத்து வந்ததால், தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் வந்து விட்டது’ என்று கூறினார். அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அவரது பயணத்தை ரத்து செய்து விட்டு மேல் நடவடிக்கைக்காக அவரையும் துப்பாக்கி குண்டுகளையும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி தொழிலதிபர் ஒருவரிடம் 15 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி தொழிலதிபரிடமிருந்து 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post ஜெய்ப்பூர் செல்ல இருந்த தொழிலதிபர் பையில் இருந்து 2 துப்பாக்கி குண்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: