பாளை ராஜகோபாலசுவாமி கோயில் புதிய தேர் நாளை வெள்ளோட்டம்: ரூ.54 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது

நெல்லை: பாளை. ராஜகோபாலசுவாமி கோயில் புதிய தேர் நாளை வெள்ளோட்டம் விடுவதற்காக ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பாளை நகரின் மையப்பகுதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோத்சவத்தின் போது பங்குனி உத்திர நாளில் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் பல ஆண்டுகளாக பழுதடைந்து ஓடாமல் இருந்தது. இதையடுத்து கோபாலன் கைங்கர்ய சபாவிற்கு அனுமதி தந்து உபயதாரர்கள் நிதி உதவியுடன் ரூ.54 லட்சத்தில் புதிய தேர் வடிவமைக்கும் பணிகள் நடந்தது.இந்த தேர் 36 அடி உயரமும், 14 அடி அகலமும், 35 டன் எடை கொண்டதாக புதிய மரத்தேர் செய்யப்பட்டுள்ளது. இதில் விஷ்ணுவுக்கு உரிய ரத லட்சணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேரில் தசாவதார சிற்பங்கள், 12 ஆழ்வார்களின் சிற்பங்கள், கண்ணன் லீலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 4 சக்கரங்களை தாங்கும் இரண்டு சிறிய சக்கரங்கள் தேரின் உள் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தேர் இழுப்பதற்கு 2 சங்கிலி வடம், திருப்பங்களில் திரும்புவதற்கு தடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. கோயில் வளாகப் பகுதியிலேயே கடந்த பல மாதங்களாக வடிவமைக்கப்பட்ட தேரின் மேல் பகுதி அலங்கார தட்டுகள் நிரந்தரமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேரை சென்னை திருமழிசை கஜேந்திர ஸ்தபதி குழுவினர் வடிவமைத்துள்ளனர். பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர் வெள்ளோட்டத்தையொட்டி கோயிலின் முகப்பு பகுதியில் 4 குதிரை பொம்மைகள் பூட்டப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணி முழுமையாக முடிந்ததையடுத்து, நாளை (28ம்தேதி) காலை 9.30 மணிக்கு மேல் தேர் வெள்ளோட்டம் விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதிய தேரை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கிச் செல்கின்றனர். தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 4 ரதவீதிகளிலும் உள்ள மரங்களின் கிளைகள் மின்வாரியத்தால் வெட்டி அகற்றப்பட்டன. இப்பணிகள் முடியும்வரை அப்பகுதியில் மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு புதிய தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post பாளை ராஜகோபாலசுவாமி கோயில் புதிய தேர் நாளை வெள்ளோட்டம்: ரூ.54 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: