விளையாட்டுத்துறைக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மாணவர்களுடன் கலந்துரையாடிய பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன்

*வரும் காலங்களில் இந்தியாவின் பதக்கங்கள் 100 ஆக அதிகரிக்கும் என்கிறார்சேலம் : வரும் காலங்களில் ஒலிம்பிக்கில் இந்தியா 100 பதக்கங்களை வெல்லும் என்று சேலத்தில் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் தங்கவேலு கூறினார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஒலிம்பிக் சாம்பியன்கள் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் சாம்பியன் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டார். அவர், சேலம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளில் இருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது மாரியப்பன் பேசுகையில், ‘‘விளையாட்டு வீரர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மிகுந்த உணவை சாப்பிடுவதோடு, அதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். எடை கூடிவிடக்கூடாது. கறி, மீன் வகைகள், சப்பாத்தி சாப்பிடலாம். பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்று திரும்பியதும், பிரதமர் மோடி என்னை பாராட்டியதுடன், கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதனையே செய்து வருகிறேன்,’’ என்றார். நிகழ்ச்சி முடிவில் மாரியப்பன் தங்கவேலு நிருபர்களிடம் கூறியதாவது: ஒலிம்பிக் சாம்பியன்களை பள்ளி மாணவர்கள் மத்தியில் பேச வைத்து விளையாட்டில் ஊக்கம் கொடுக்க அரசு என்னை போன்றவர்களை அனுப்பி வைத்துள்ளது. மாணவர்கள் மத்தியில் பேசுவதன் மூலம், அவர்களுக்கு ஊக்கம் கிடைத்து வருங்காலத்தில் சாதிக்க முடியும். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் நன்கு பயிற்சி பெற இயலும். கடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை வென்றது. வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் இது 100 பதக்கங்களாக அதிகரிக்கும். நான் அடுத்த பாராலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், பயிற்சியை தொடங்கி விட்டேன். முதலில் ஆசிய விளையாட்டும், அடுத்து உலக சாம்பியன் தொடரும் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்பேன். பிறகு நடக்கும் பாராலிம்பிக்கில் 2 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, அதற்கான பயிற்சியில் தீவிரமாக மேற்கொண்டுள்ளேன். சேலத்தில் தனியாக அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சேலத்தில் சிந்தடிக் மைதானம் விரைவில் அமைகிறது. இதன்மூலம் கிராமப்புறத்தில் இருந்து வரும் வீரர்கள் நன்கு பயன் பெறுவார்கள். இவ்வாறு மாரியப்பன் தங்கவேலு கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், பள்ளி முதல்வர் ஜோலி ஜோசப் மற்றும் விளையாட்டு அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் மாணவ, மாணவிகளுடன் மாரியப்பன் கைப்பந்து விளையாடினார். இதனால், மாணவர்கள் உற்சாகமடைந்தனர். …

The post விளையாட்டுத்துறைக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மாணவர்களுடன் கலந்துரையாடிய பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் appeared first on Dinakaran.

Related Stories: