மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் சமூக நீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களுக்கு இடம்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:  தேசிய உயர்கல்வித்தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள உயர்கல்வி கற்பதற்காக கட்டுப்பாடுகளை சமூகநீதியில் அக்கறை கொண்ட எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு, 3 ஆண்டு பட்டப்படிப்பை நான்காண்டுகளாக நீட்டித்தல், பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் பருவத் தேர்வுகளில் வெற்றி பெறாத மாணவர்களை, பட்டப்படிப்பை தொடர்ந்து படிக்க அனுமதிக்காமல், அவரவர் நிறைவு செய்த ஆண்டுகளின் அடிப்படையில், சான்றிதழ், பட்டயம் கொடுத்து வெளியேற்றுதல் போன்றவை சமூக நீதிக்கு எதிரானவை.ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பைக் கூட படித்து விடக் கூடாது என்பது தான் தேசிய உயர்கல்வித்தகுதிகள் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கமாக இருக்கக்கூடும். இதை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்கக்கூடாது. மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு இதுவரை எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல திட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தைக் கொண்டு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி வழங்குவதற்கான முயற்சிகளும் நடந்தன. பாமகவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் கலை, கலாச்சாரம் குறித்த பயிற்சி ரத்து ஆனது. இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகளால் புதிய கல்விக் கொள்கை குறித்த ஐயம் முழுமையாக விலகவில்லை. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு அறிவித்த மாநிலக் கல்விக் கொள்கை குறிப்பிட்ட காலவரைக்குள்  உருவாக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு இடமளிக்க வேண்டும். இவ்வாறுஅதில்  கூறப்பட்டுள்ளது….

The post மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் சமூக நீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களுக்கு இடம்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: