சூடு பிடிக்கும் நிலமோசடி விவகாரம்!: ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 அரசு அதிகாரிகள் மீது வழக்குபதிவு.. ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்..!!

சென்னை: தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய புகாரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்ளிட்ட 11 அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை அனுமதியின்றி எடுத்ததுடன் பின்னர் அந்த நிலங்களும் தனியார் சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது கனிமவளத்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த 11 அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அனுபிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post சூடு பிடிக்கும் நிலமோசடி விவகாரம்!: ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 அரசு அதிகாரிகள் மீது வழக்குபதிவு.. ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: