ஜெயங்கொண்டம் அருகே பயங்கரம் தமிழர் நீதி கட்சி நிறுவனர் கார் மீது துப்பாக்கி சூடு: வெடிகுண்டுகளையும் வீசிய கும்பலுக்கு வலை

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுபா இளவரசன்(52). தமிழர் நீதிக் கட்சி நிறுவனர். தற்போது, ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே வசித்து வருகிறார். இவர் இதற்கு முன் தமிழர் விடுதலை படையில் இருந்தார். பின்னர் தமிழர் விடுதலை இயக்கத்தை துவக்கி நடத்தி வந்தார். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, அரசு இந்த இயக்கத்துக்கு தடை விதித்தது. இந்தநிலையில் தமிழர் நீதிக்கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். சுபா இளவரசன் மீது கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய எஸ்ஐ கையை வெட்டியது, ஆள்கடத்தல், கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.நேற்று முன்தினம் இவர் வந்த கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீசில் சுபா இளவரசன் புகார் அளித்தார். அதில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் துளாரங்குறிச்சி பைபாஸ் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் திடீரென எனது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் வந்து விட்டோம்.எனவே துப்பாக்கியாலும், வெடி குண்டுகளாலும் தாக்கிய நபர்கள் மீது, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழும், சதித்திட்டம் தீட்டி கொலை முயற்சி பிரிவின் கீழும் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், எனக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, ஏடிஎஸ்பி திருமேனி உள்ளிட்டோர் சுபா இளவரசனிடம் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகினறனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post ஜெயங்கொண்டம் அருகே பயங்கரம் தமிழர் நீதி கட்சி நிறுவனர் கார் மீது துப்பாக்கி சூடு: வெடிகுண்டுகளையும் வீசிய கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: