குன்னூர் மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

குன்னூர், ஆக. 4: குன்னூர் மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்து வருவது வழக்கம். அதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகள் துண்டிக்கப்படுவதும், சேதம் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் குன்னூர் மலை பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சூழலில் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள ஆபத்தான மரங்களை நெடுஞ்சாலை துறையினர் கண்டறிந்து அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக 13வது கொண்டை ஊசி வளைவின் அருகே சாலையின் ஓரத்தில் காய்ந்த நிலையில் இருக்கும் மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இம்மரத்தின் கிளைகள் எந்நேரத்திலும் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற ஆபத்தான மரங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறையினர் அதனை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: