கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் சுழல் மையத்தில் வனவிலங்கு கண்காணிப்பு மையம் நாளை திறப்பு

ஊட்டி, டிச. 19: முதுமலை புலிகள் காப்பத்திற்கு மிக அருகில் கூடலூர் வனப்பகுதி அமைந்துள்ளதால், புலிகளும் அடிக்கடி இங்கு தென்படுகிறது. மேலும் அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ள நிலையில், சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.

குறிப்பாக யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போது, மனித- விலங்கு மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. இதில், அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. எனினும், யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. யானைகள் வருகையை கண்டறிய முடியாத சூழ்நிலை உள்ளதால், மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில் யானைகள் உட்பட அனைத்து வன விலங்குகளையும் கண்டறிய, கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 6 வனச்சரங்களிலும் ரூ.6 கோடியில் தற்போது 44 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஒருங்கிணைக்கும் மையம் ஜீன்பூல் விரிவாக்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் இந்த மையத்திற்கு சென்றவுடன், அருகில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களுக்கு ெதரிவிக்கப்படும். அவர்கள் உடனடியாக அப்பகுதிகளுக்கு சென்று வன விலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த கண்காணிப்பு மையத்தை திறப்பு விழா நாளை (20ம் தேதி) நடக்கிறது.

Related Stories: