மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்தும் கார்ப்பரேட் பொதுக்குழுவுக்கும் பாமகவுக்கும் சம்பந்தம் கிடையாது: ராமதாஸ் தரப்பு அதிரடி

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில் இருவரும் கட்சியை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்தனர். அதன்படி, வரும் 17ம் தேதி திண்டிவனம் புதுச்சேரி செல்லும் வழியில் பட்டானூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கும் என ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியானதும், ராமதாசுக்கு போட்டியாக வரும் 9ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்புளுயன்ஸ் அரங்கில் நடக்கும் என அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

இந்நிலையில் அன்புமணியின் பொதுக்குழுவுக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ராமதாஸ் தரப்பை சேர்ந்த பாமக செய்தி தொடர்பாளரும் ராமதாசின் தனி உதவியாளருமான சுவாமிநாதன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏதோ ஒரு கார்ப்பரேட் அமைப்பால் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் குழுவிற்கும், பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏனெனில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் ஒப்புதலின்றி கூட்டப்படும் கூட்டம் இது. பாமக பொதுக்குழு என அறிவிக்கப்பட்டதே சட்டவிரோதமானது. 17 வருடங்களாக பாமகவினரையும் மற்றும் அப்பாவி வன்னியர்களையும் ஏமாற்றியது போதும். இனியாவது ராமதாஸ் தலைமையை ஏற்று 2026 தேர்தலை சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

பாமக செய்தி தொடர்பாளர் சுவாமிநாதன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்,அன்புமணிக்கு எந்தவித கூட்டம் கூட்டவும், அறிவிப்பு வெளியிடவும் அதிகாரம் கிடையாது. மீண்டும் மீண்டும் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாமக தயங்காது என்று தெரிவித்துள்ளார்.

The post மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்தும் கார்ப்பரேட் பொதுக்குழுவுக்கும் பாமகவுக்கும் சம்பந்தம் கிடையாது: ராமதாஸ் தரப்பு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: