தெலங்கானாவில் எதிர்ப்பை மீறியதால் ஆத்திரம்; காதலனுடன் செல்போனில் பேசிய இளம்பெண் கழுத்து நெரித்து கொலை: அண்ணன் கைது

திருமலை: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் செல்போனில் பேசிய இளம்பெண்ணை, அவரது அண்ணன் மின்சார வயரால் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மகன் ரோஹித் (24), மகள் ருச்சிதா (22). இவர்களில் ருச்சிதா பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரோஹித், அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ருச்சிதாவும் அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பஞ்சாயத்து பேசி கண்டித்துள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்த ருச்சிதாவும் தினேசும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

கடந்த 28ம்தேதி, பெற்றோர் வெளியே சென்ற நிலையில் ருச்சிதாவும், ரோஹித்தும் வீட்டில் இருந்தனர். அப்போது ருச்சிதா, தினேசுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த ேராஹித், ருச்சிதாவை கண்டித்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரோஹித், வீட்டில் இருந்த மின்சார வயரால், ருச்சிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறி ருச்சிதா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஹித் வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். ஒரு அறையில் கட்டிலில் கிடந்த ருச்சிதா, தூங்கி கொண்டிருப்பதாக நினைத்து தங்களது வேலைகளை செய்து கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ருச்சிதா எழுந்து வராததால், சந்தேகமடைந்த பெற்றோர், அறைக்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.இதுகுறித்து ரங்காரெட்டி போலீசாருக்கு ராகவேந்திரா தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் ருச்சிதா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகள் சாவில், மகன் ரோஹித் மீது சந்தேகம் உள்ளதாக ராகவேந்திரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து கோத்தூர் பென்ஜர்லா கிராஸ் சாலையில் பதுங்கியிருந்த அவரை நேற்று பிடித்து விசாரித்தனர். அதில் எதிர்ப்பை மீறி காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசியதால் ருச்சிதாவை மின்சார வயரால் கழுத்து நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரோஹித்தை கைது செய்து, ரங்காரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தெலங்கானாவில் எதிர்ப்பை மீறியதால் ஆத்திரம்; காதலனுடன் செல்போனில் பேசிய இளம்பெண் கழுத்து நெரித்து கொலை: அண்ணன் கைது appeared first on Dinakaran.

Related Stories: