துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜெகதீப் தன்கர். 2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார். அவையிலும், அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களுக்கும் மாநிலங்களவை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கும் பலமுறை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலளங்களவையை வழிநடத்தினார்.

அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க நோட்டீஸ் தீர்மானம் தொடர்பான மனுக்களை அவரிடம் அனைத்துக்கட்சி எம்பிக்களும் வழங்கினர். இந்த சூழலில் நேற்று இரவு துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: