×

பாரில் தீப்பெட்டி தரமறுத்த வாலிபர் குத்திக்கொலை

மதுக்கரை: மதுக்கரை போடிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (28). நேற்று முன்தினம் இரவு நண்பர்களான ஜீவன்பிரசாத் (28), மதன்குமார் (30) ஆகியோருடன் மலுமிச்சம்பட்டி அருகே ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு ஆத்துப்பாலத்தில் வசித்து வரும் முகமது ஹாரூன் (32) என்பவரும் மது அருந்த வந்திருந்தார்.அவர் சிகரெட் பற்ற வைக்க ஜெயக்குமாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை ஜெயக்குமார், நண்பர் ஜீவனுடன், எல் அண்ட் டி பைபாஸ் ரோடு தனியார் கல்லூரி சிக்னல் அருகே ஒரு பேக்கரியில் டீ குடிக்க சென்றார். அப்போது கோவையை சேர்ந்த விக்கி (எ) விக்ரம் என்பவருடன் காரில் பின்தொடர்ந்து வந்த முகமது ஹாரூன், மீண்டும் ஜெயக்குமாரிடம் தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த ஜெயக்குமாரை அவரது நண்பர் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து திருப்பூர் அடுத்த நல்லூரில் பதுங்கி இருந்த விக்கி (எ) விக்ரம், முகமது ஹாரூன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

* பீடி கொடுக்க மறுத்த தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை: 2 சிறுவர்கள் கைது
தேனி மாவட்டம், தேவாரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (51). இவர் குடும்பத்தை பிரிந்து திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்தார். அவர், நேற்று காலைஅங்குள்ள கழிப்பறை அருகே தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து, அம்மாபாளையம் பாரதி நகரில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஞாயிறுக்கிழமை காலை, மதியம் இரண்டு நேரமும் மது குடித்தோம்.

இரவில் பைக்கில் வந்தபோது கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அம்மாபாளையம் கழிப்பிடம் அருகே அமர்ந்திருந்தவரிடம் பீடி கேட்டோம். போதை தலைக்கேறி இருந்த எங்களுக்கு அவர் பீடி தர மறுத்தார். நாங்கள் அவரது சட்டை பையில் இருந்த பீடியை எடுத்தோம். அப்போது அவர் எங்களை திட்டியதால் ஆத்திரமடைந்து கீழே தள்ளி அருகில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை தூக்கி அவரது பின் தலையில் போட்டோம். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். போலீஸ் பிடித்துவிடுவார்கள் என்று எண்ணி தலைமறைவானோம். எனக்கூறினர். 2 சிறுவர்களையும் கைது செய்த போலீசார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post பாரில் தீப்பெட்டி தரமறுத்த வாலிபர் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Madhukar ,Jayakumar ,Madhukar Bodipalayam ,Jeevan Prasad ,Madankumar ,Tasmak ,Malumichampati ,Mohammed Haroon ,Dinakaran ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது