நாகர்கோவில், ஜூலை 7: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் நாளை (8ம் தேதி) முதல் நடைபெறுகிறது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 341 முகாம்கள் நடத்தப்படும். நகர்புற பகுதிகளில் 176, ஊரகப் பகுதிகளில் 165 முகாம்களும் நடைபெறும்.
நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகக் சென்று முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விவரங்கள், பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாமிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே பெறப்படும். விண்ணப்பங்கள் மீது 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் குறித்த விபரங்கள் பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி வரும் 8ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி 3 மாதம் தொடர்ச்சியாக நடக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்; ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் appeared first on Dinakaran.
