“உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங்” : அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், திமுக எம்.பி. கனிமொழி புகழஞ்சலி!!

சென்னை : இந்தியாவின் 7வது பிரதமரும் சமூக நீதிக் காவலருமான மறைந்த வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்க தனக்கு கிடைத்த பிரதமர் பொறுப்பை பயன்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று!மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர்.சமூகநீதி மற்றும் மதசார்பின்மையின் பக்கம் உறுதியாக நின்று ஆட்சி புரிந்து, அதன் காரணமாகவே பதவியையும் இழந்த தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்.இத்தகைய சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங் அவர்களின் புகழ் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் : காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மண்டல் குழுவின் பரிந்துரையை தனது ஆட்சிக் காலத்தில் அமல்படுத்திய “சமூகநீதிக் காவலர்” திரு.வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று! புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி பெருமைப்படுத்தியவர் வி.பி.சிங் அவர்கள்.’காவிரி நடுவர் மன்றம்’ அமைத்த புகழுக்குரியவர் வி.பி.சிங் அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.சமூகநீதிக் காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு தமிழ்நாட்டில் கம்பீர சிலை அமைத்து பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் அவர்கள். இன்றைய நாளில் “சமூகநீதிக் காவலர்” திரு.வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்.

திமுக எம்.பி. கனிமொழி : இந்தியாவின் சமூகநீதிக் காவலர், தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற தோழர், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான தேசியக் குரலாய் ஒலித்தவர் திரு‌. வி.பி.சிங் அவர்கள்.அவரது பிறந்தநாளான இன்று அவர் கனவு கண்ட சமத்துவ இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.

 

The post “உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங்” : அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், திமுக எம்.பி. கனிமொழி புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Related Stories: