சென்னை: அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடு பயணிக்கும் எந்த ஒரு நபரும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளமான பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா, பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும். ஆனால் இதை பெறுவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது எனவும், இதனை எளிய முறையில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மிக எளிய முறையில் விண்ணப்பித்து தடையில்லா சான்று பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : தமிழக அரசின் சிம்பிள்ஜிஓவி (SimpleGov) முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது, அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அடையாள சான்றிதழ், தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 விதியின் 24ஏ கீழ் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், ஆவணங்கள் பெறுவதில் சிரமம், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பிரச்சினைகள், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சர்வதேச கருத்தரங்குகள், சர்வதேச அறிவு மையங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் இருந்தும் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளில் அதிக சிக்கல் இருப்பதாக சுட்டி காட்டப்பட்டு சர்வதேச வாய்ப்புகளை தவறவிட்டு விடுகின்றனர். இதனால் இதனை ஆராய்வதற்காக அரசு குழு அமைத்தது.
இந்த குழுவான கடந்த 1.4.2025ம் ேததி விரிவாக ஆய்வு செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. அதன்படி, சாதாரண பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன், குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதை பூர்த்தி செய்து புதிய பாஸ்போர்ட் பெறவும் அல்லது பழைய பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறையின் நிர்வாக தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
இதன்மூலம், சிக்கலான நடைமுறைகள் குறைக்கப்பட்டு, எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று, முகவரிச் சான்று) டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். ஒருவேளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மேலும் விவரங்கள் தேவைப்படும் சுழலில் ஏற்பட்டால், அவசர கால நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை தலைமையே தடையில்லா சான்று அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு எளிய முறையில் தடையில்லா சான்று: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
