சென்னை – டெல்லி இடையே இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து.!

சென்னை: சென்னை – டெல்லி இடையே இருமார்க்கத்திலும் இயக்கப்பட இருந்த 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது, விபத்தில் சிக்குவது போன்ற செய்திகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12ம் தேதி விபத்தில் சிக்கியது. 274 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த விமான போக்குவரத்துத் துறையையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்திற்கு பிறகு அனைத்து விமானங்களும், முழுமையான பரிசோதனைக்கு பின்னரே இயக்கப்படுகின்றன. விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு இருந்தாலும், அதை சரி செய்த பின்பே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சில மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானங்கள் புறப்படுவது, அல்லது ரத்து செய்யப்படுவது போன்றவை அடிக்கடி நடக்கின்றன.

இந்த நிலையில் சென்னை – டெல்லி, டெல்லி – சென்னை இடையேயான 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம் நிர்வாக காரணங்களால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பயணிகளுக்கு அது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தான், அதிகாலை 5 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இன்று அந்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்குதான் தமாமிலிருந்து சென்னைக்கு வந்தது. எனவே சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றது என்று கூறுகின்றனர்.

The post சென்னை – டெல்லி இடையே இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து.! appeared first on Dinakaran.

Related Stories: