பாஜ கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகலா..? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் பாஜ தேர்தல் பொறுப்பாளரான, ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 10ம்தேதி சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், இன்னுமும் தீர்வு கிடைக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் கடந்த காங்கிரஸ் ஆட்சியை போன்றுதான் ஆகிவிடும் என முதல்வர் ஒன்றிய அமைச்சரிடம் ஆதங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான தகவல் சிற்றேட்டினை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். அவரிடம், ஒன்றிய அரசு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதோடு புதுச்சேரி நிர்வாகம் தொடர்பாகவும் பேசினேன்.

என்.ஆர்.காங்கிரஸ் துவங்கிய நாளில் இருந்து கேட்கப்படும் முக்கிய கோரிக்கை மாநில அந்தஸ்துதான். அதனை தொடர்ந்து வலியுறுத்துவோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால் பாஜ கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு ஒன்றிய அரசை எங்களுடைய அரசு நிச்சயமாக வலியுறுத்தும் என்று முதல்வர் ரங்கசாமி பதில் அளித்தார்.

The post பாஜ கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகலா..? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: