வந்தவாசி, மே 6: வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழுவங்கரணை கிராமத்தில் ரூ.12.59 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி, கீழ்வில்லிவலம் கிராமத்தில் ரூ.34.60 லட்சம் செலவில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணி, ரூ.17.30 லட்சத்தில் பள்ளியில் கணினி அறை ஏம்பலம் கிராமத்தில் 11 விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு ரூ.55 லட்சம் செலவில் புதிய வீடு கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அதேபோல் நல்லூர் கிராமத்தில் பாரத பிரதமர் சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.11 கோடியில் சாலை அமைக்கும் பணி, ரூ5.36 கோடி மதிப்பீட்டில் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பாஞ்சரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கால்வாய் முழுவதுமாக அடைக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாறியதால் மழை காலங்களில் மழைநீர் கால்வாயில் செல்ல முடியாமலும் மேலும் பாசன நேரங்களில் கால்வாய் மூலமாக பாசனங்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கால்வாய் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தாசில்தார் பொன்னுசாமியை தொடர்பு கொண்டு உடனடியாக பாஞ்சரை ஏரி வரத்து கால்வாய் பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாய் ஏற்படுத்த ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், ராஜன் பாபு, பொறியாளர்கள் சீனிவாசன், பத்மநாபன், செந்தில், குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
The post ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதியை திட்ட இயக்குனர் ஆய்வு உடனடியாக அகற்ற தாசில்தாருக்கு உத்தரவு வந்தவாசி அடுத்த பாஞ்சரை appeared first on Dinakaran.
