முர்ஷிதாபாத் வன்முறையால் முதல்வர் மம்தா அரசை கலைத்துவிட்டு மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை?: ஆளுநரின் முடிவால் திடீர் அரசியல் பரபரப்பு

கொல்கத்தா: முர்ஷிதாபாத் வன்முறையால் மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி மாநிலத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்பு சட்டத்தை கண்டித்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி முர்ஷிதாபாத்தில் பயங்கர வன்முறை நடந்தது. குறிப்பிட்ட மதத்தினரின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 2 பேர் பலியானார்கள்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை 138 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முர்ஷிதாபாத் வன்முறை சம்பவம் தொடர்பாக, ேநற்று ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒன்றிய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைகள் சம்பவங்கள் யாவும் திட்டமிட்டவை மற்றும் பண்பாட்டு அழிப்பை நோக்கமாகக் கொண்டவை. இந்த வன்முறைகள் மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறை பாதித்த பகுதிகளில் மத்திய படைகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். எல்லைக் காவல் நிலையங்களில் படைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் அமைதியை மீட்டெடுக்க, மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். மாநில அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடத்திருக்காது. எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.

ஆளுநரின் மேற்கண்ட கருத்தால், மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் பரிந்துள்ளதாக ெதரிகிறது. முர்ஷிதாபாத் வன்முறை சம்பவம் குறித்து ஒன்றியய அரசுக்கு ஆளுநர் அளித்த அறிக்கையில், மேற்குவங்கத்தில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசை கலைப்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும், மாநிலத்தில் பரவும் வன்முறையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாகவும் தகவல்கள் ெதரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் போஸ், கொல்கத்தாவில் உள்ள கிழக்கு கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை நிலையாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது. இந்த நிலையில் மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக ஆளுநர் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுவது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘சட்டப்பிரிவு 356-ஐ திடீரென அமல்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் விதிமுறைகள் உள்ளன. நீதித்துறையும் உள்ளது. ஆளுநர் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை கலைக்க முடியாது. மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதை புரிந்துகொள்கிறேன். மாநில சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு மாநில அரசின் நிர்வாகமும், முதல்வருமே பொறுப்பாகும். மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி தான் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது சரியாக இருக்காது’ என்று கூறினார்.

மணிப்பூர் வன்முறை முன் உதாரணமா?
வடகிழக்கு மாநிலமான மணிப்​பூர் வன்முறையால் மாநிலம் முழு​வதும் 11,000க்​கும் மேற்​பட்ட வழக்​குகள் பதிவு செய்​யப்​பட்டன. இரண்டரை ஆண்டு​களாகி​யும் மணிப்​பூரில் இன்ன​மும் இயல்பு நிலை திரும்பாததால், கடந்த பிப்ரவரி 10ம் தேதி மணிப்​பூர் சட்டப்​பேர​வை​யின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருந்​த நிலையில், இந்த தொடரை ஆளுநர் அஜய் குமார் பல்லா திடீரென ரத்து செய்​தார். இந்த சூழலில் பாஜக முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்​தார். மாநிலத்​தின் நிலைமை தொடர்பாக ஆளுநர் அஜய் குமார் பல்லா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு​விடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்​தார். அதில் மணிப்​பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்செய்ய ஆளுநர் பரிந்​துரை செய்திருந்​தார். இதைத் தொடர்ந்து மணிப்பூரில் கடந்த பிப். 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

The post முர்ஷிதாபாத் வன்முறையால் முதல்வர் மம்தா அரசை கலைத்துவிட்டு மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை?: ஆளுநரின் முடிவால் திடீர் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: