வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தையொட்டி தொழிலாளர்களுக்கு சரியான ஓய்வு மருத்துவ கவனிப்பு உறுதி செய்ய வேண்டும்

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.

டிஆர்ஓ மாலதி, சார் ஆட்சியர் (பயிற்சி) ரவிக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கலெக்டர் சுப்புலட்சுமி பேசியதாவது:வெப்ப அலை தொடர்பான நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு, குளிர் வார்டுகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். செவிலியர்களுக்கு வெப்ப அலை நோய்களுக்கான பயிற்சி அளிக்க வேண்டும்.

இதுெதாடர்பாக தினசரி அறிக்கை தயார் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு தணிக்கை அளிக்க வேண்டும். நிலைமை மிகவும் சூடாக இருக்கும் பகுதிகளில் 2 தொகுதிகளாக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படலாம்.

வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். துப்பரவுத் தொழிலாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் பகலில் போதுமான ஓய்வு வழங்கப்படுவதையும், பணியிடத்தில் குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் மற்றும் நிழற்குடை இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீர் பந்தல், தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். நெடுஞ்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் ரயில்வே பணி தளங்களில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சரியான வேலை நேரம், ஓய்வு மற்றும் மருத்துவ கவனிப்பு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.

தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்க வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைக்கும் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலை மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கோடை காலத்தில் ஏற்படும் தீவிபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலி ஒத்திகை பயிற்சியை நடத்த வேண்டும்.

வெயிலின் தாக்கத்தினை தணிக்கும் பொருட்டு பொதுமக்கள் பருகும் குளிர்பானங்கள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்க உதவும் ஐஸ்கட்டிகள் ஆகியவை பொதுமக்கள் உபயோகப்படுத்தும் அளவிற்கு தரமானதாக உள்ளதா? என கோடை காலம் முடியும் வரையில் அனைத்து வியாபார நிறுவனத்திலும் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் பழவகைகள் தரமானதாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

The post வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தையொட்டி தொழிலாளர்களுக்கு சரியான ஓய்வு மருத்துவ கவனிப்பு உறுதி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: