வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது ஆரணி வாலிபர் கொலை வழக்கில்

ஆரணி, ஏப்.25: ஆரணி வாலிபர் கொலை வழக்கில் ெதாடர்புடைய வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆரணி டவுன் சாந்தா தெருவை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் கரிமா (எ) விக்னேஷ்(26). தனியார் நிதி நிறுவன ஊழியர். தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். நண்பர்களாக இருந்த இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2021ம் ஆண்டு மணிகண்டனை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தலையில் கல்லை போட்டு கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ் உட்பட அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், ஜாமீனில் வெளியே வந்த விக்னேஷூக்கும் மணிகண்டனின் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மணிகண்டன் கொலை வழக்கு தொடர்பாக சமாதானம் பேசுவதற்காக, விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆரணி டவுன் புதுகாமூர் செல்லும் சாலையில் உள்ள மணிகண்டனின் ஆதரவாளர்களிடம் சென்றனர். அப்போது, இருதரப்பினரும் இடையே ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தனபால், பிரசாந்த், அசோக்குமார், தினேஷ்குமார், தாமோதரன், கமல், சந்தோஷ்குமார், ரமேஷ், வக்கீல் கணேஷ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய வக்கீல் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுதாகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணேசனிடம் ஆரணி டவுன் போலீசார் வழங்கினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தனபால், ரமேஷ் ஆகிய இருவரும் கடந்த 11ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது ஆரணி வாலிபர் கொலை வழக்கில் appeared first on Dinakaran.

Related Stories: