நிலக்கோட்டை: ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (32). மெக்கானிக். மனைவி சிவசக்தி (23). இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை நிலையில் சிவசக்தி மீண்டும் கர்ப்பமுற்றார். சிவசக்திக்கு கடந்த ஏப். 16ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு சின்னாளபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அன்றிரவே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடம் இருந்த நிலையில் 19 தேதி மாலை டிஸ்சார்ஜாகி வீடு திரும்பினர். ஏப்ரல் 20ம் தேதி குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் ரகசியமாக புதைத்துள்ளனர். பிறந்து 4 நாட்களான பச்சிளம் பெண் குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில் ஒரே இரவில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. தகவலறிந்து ஜம்புதுரைக்கோட்டை விஏஓ கலா, கிராம செவிலியர் வந்து விசாரணை செய்த போது சிவசக்தி முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து கிராம செவிலியர் அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவ அலுவலர் வினோத்திடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் (பொ) அமுதா மற்றும் போலீசார் வந்து சிவசக்தி, பாலமுருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சிவசக்தி ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்த நிலையில் இரண்டாவதாகவும் பெண் குழந்தையே பிறந்ததால் அந்த ஆத்திரத்தில் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து சிவசக்தியை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று சிவசக்தி வீட்டின் பின்புறம் குழந்தையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். பின்னர் நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி முன்னிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தேவி பியான்ஷா, ஜெயபிரகாஷ் அடங்கிய குழுவினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பிறந்த 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பிறந்து 4 நாளேயான பெண் குழந்தையை தாயே கொன்று புதைத்த கொடூரம்: ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரம் appeared first on Dinakaran.