பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பலரும் சொந்த ஊருக்கு அவசரமாக திரும்பி வருகின்றனர். இதே போல அங்கிருந்து உறவினர்களை அழைத்து வர பலரும் ஸ்ரீநகருக்கு விமானத்தில் அவசரமாக செல்கின்றனர். இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் ஸ்ரீநகருக்கான டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதாக கூறப்பட்டது. ஸ்ரீநகருக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் விலை ரூ.65,000க்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் திரும்புவதற்கு வசதியாக ஸ்ரீநகரிலிருந்து விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு விமான நிறுவனங்களை விமான ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) நேற்று கேட்டுக் கொண்டது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 கூடுதல் விமானங்களுடன் இன்று டெல்லிக்கு மேலும் 3 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. எந்தவொரு கட்டண உயர்வையும் தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டு நியாயமான விலையை உறுதி செய்ய முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இதைத் தொடர்ந்து விமான டிக்கெட் கட்டணங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டன. மேலும், விமான டிக்கெட் ரத்து மற்றும் மறுதேதிக்கு மாற்றுதலுக்கான கட்டணங்களை நீக்குவதாக அனைத்து விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
The post ரூ.65,000 வரை விமான டிக்கெட் விலை உயர்வு: ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.