சென்னை: பழசை மறந்து விடலாமா சார்?, வார்த்தைக்கு வார்த்தை குறுக்கிட்டீங்களே என்று அதிமுக உறுப்பினர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி செந்தில்குமார் (அதிமுக) பேசும் போது, ‘மின்சாரம், டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வப்போது எழுந்து பதில் அளித்தார். அமைச்சர் அதிக அளவில் குறுக்கீடு செய்கிறார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், ‘எங்கள் உறுப்பினர் பேசும்போது, 25 முறைக்கு மேல் குறுக்கீடு செய்து பதில் அளிக்கிறீர்கள்.
இப்படி செய்தால் எப்படி பேச முடியும்? அவருக்கு பேசுவதற்கு கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும்’ என்றார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘உங்கள் உறுப்பினர் 15 நிமிடம் பேசி முடித்து விட்டார். குற்றச்சாட்டுகளை சொல்லும்போது, அமைச்சர்கள் அதற்கான பதிலை தர தான் செய்வார்கள்’ என்றார். அப்போது, எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, ‘‘ அதிமுக ஆட்சியில் ஒரு மணி நேரம் கூட பேச வாய்ப்பு கொடுத்தோம், என்றார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், ‘‘என்ன சார், பழச மறக்கலாமா? சார், நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தாலே அமைச்சர்கள் வார்த்தைக்கு வார்த்தை குறுக்கீட்டு பதில் அளித்ததை நீங்கள் மறந்து விட்டீர்களே..’ என்றார். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post பழசை மறந்து விடலாமா சார்? வார்த்தைக்கு வார்த்தை குறுக்கிட்டீங்களே : அமைச்சர் துரைமுருகன் பதிலால் சிரிப்பலை appeared first on Dinakaran.