பின்னர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிஸின் உடல்நிலை தேறி வந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றார்.
சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட போப் பிரான்சிஸ், 35 ஆயிரத்துக்கும் மேல் கூடியிருந்த மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து கூறி ஆசீர்வதித்தார். அதைத் தொடர்ந்து அவரது ஈஸ்டர் செய்தி வாசிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்டர் திங்களான நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் காலமானார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. போப் மறைவு பேரவையை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர் போப் பிரான்சிஸ் என்றும், மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் பிரான்சிஸ் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
பின்னர் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதை அடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. குறிப்பிட்ட நாளில் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.
