ஈரோடு, ஏப். 22: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 49 வது பட்டமளிப்பு விழா தியாகி குமரன் கலையரங்கில் நடைபெற்றது. முதலியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலர் மற்றும் தாளாளர் கே.கே. பாலுசாமி முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல்வர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான சதாசிவம் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 1,064 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது. இளநிலை மாணவர்கள் 22 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 9 பேருக்கும் தங்கப்பதக்கங்கள் வழங்கி அவர் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது: இன்றைய மாணவர்கள் எதிர் காலத்தை வடிவமைப்பவர்கள்.
நமது நாட்டை இன்று இருப்பதை விடவும் எதிர் காலத்தில் வலிமை ஆக கட்டமைக்க தேவையான வளத்தையும், மீள் தன்மையும் மாணவர்கள் பெற்று பொறுப்புகளை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக பெற்றோரை மதித்து பேண வேண்டும். கல்வி கற்பித்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை மறக்காது அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வெற்றி என்பது சவால்களின் பாறைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெற்றி பெற சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளுங்கள். அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. தூய்மை, பொறுமை மற்றும் விடா முயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதது. எல்லா முயற்சிகளிலும் ஆர்வம் வேண்டும்.
மாணவர்களுக்கு நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியும் அடிப்படையில் கல்வியின் தரத்தை சார்ந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார். விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளைக் கல்லூரி இயக்குநர் வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் வெங்கடாசலம், வழி நடத்தினர். இந்நிகழ்வில். டிரஸ்ட் துணைதலைவர் மாணிக்கம், மற்றும் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
The post ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.